அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து 11 அடுக்குமாடி: மெளலிவாக்கம் சம்பவத்தை மறந்துவிட்டீர்களா? : உயர் நீதிமன்றம் கேள்வி

அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து 11 அடுக்குமாடி கட்டடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மெளலிவாக்கம் சம்பவத்தை மறந்து விட்டீர்களா

அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து 11 அடுக்குமாடி கட்டடம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மெளலிவாக்கம் சம்பவத்தை மறந்து விட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் குமுதா தாக்கல் செய்த மனுவில், அனகாபுத்தூர் மூகாம்பிகை நகரில் பல ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்து வந்தோம். எங்களை அதிகாரிகள் போலீஸ் துணையுடன் வெளியேற்றினர். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்துக்கு அருகில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து மிகப் பெரிய கட்டடம் கட்டப்படுவது குறித்து நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் சைதாப்பேட்டை வட்டாட்சியர், சைதாப்பேட்டை மண்டல மாநகராட்சி அதிகாரிகள், சிஎம்டிஏ அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு தொடர்புடைய அனைத்து ஆவணங்கள், கட்டுமானம் நடைபெறும் இடத்தின் புகைப்படத்துடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
ஆவணங்கள், புகைப்படத்துடன் அதிகாரிகள் ஆஜர்: இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிஎம்டிஏ சார்பில் ஆஜரான அதிகாரிகள், தனியார் கட்டுமான நிறுவனம் பட்டா நிலத்தில் முறையான அனுமதி பெற்று கட்டடத்தைக் கட்டி வருவதாகக் கூறி அதற்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தைத் தாக்கல் செய்தனர். 
மாநகராட்சி தரப்பில் ஆஜரான அதிகாரிகள் சிஎம்டிஏ அனுமதி அளித்ததால், தாங்களும் அனுமதி அளித்ததாகத் தெரிவித்தனர். இதே போன்று பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் தெரிவித்தனர். 
2015-ஆம் ஆண்டு வெள்ள நிலைமை...அப்போது தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த நீதிபதிகள், அடையாறு ஆற்றங்கரையில் இத்தனை பெரிய கட்டுமானத்துக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது சைதாப்பேட்டை பாலத்தின் அருகில் நிலைமை எப்படி இருந்தது என அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அந்தப் பகுதியில் மண் பரிசோதனை கூட செய்யாமல் இத்தனை பெரிய கட்டடத்தை ஆற்றங்கரைக்கு அருகில் அந்த நிறுவனம் கட்டியது வியப்பாகத்தான் உள்ளது. மேலும், ஆற்றங்கரையின் அளவு சரியாக உள்ளதா எனத் தெரிவிக்கப்படவில்லை. 
மௌலிவாக்கம் சம்பவத்தை...: தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டிவிட்டது. ஆவணங்கள் சரியாக இருந்ததால் அனுமதி வழங்கிவிட்டதாக நீங்கள் (அதிகாரிகள்) கூறுகிறீர்கள். 
மெளலிவாக்கம் சம்பவத்தில் இருந்து இன்னும் நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒருவேளை இந்தச் சம்பவத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களா எனத் தெரியவில்லை.
இந்த வழக்கில் கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் மற்றும் சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளை ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்படுகின்றனர். இது குறித்த ஆவணங்களுடன் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 20) ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com