கர்ப்பகால விவரங்களை பதிவு செய்ய மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னையில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்ற மென்பொருளில் (PICME) பதிவு செய்து பயன்பெறலாம் என
கர்ப்பகால விவரங்களை பதிவு செய்ய மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னையில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்ற மென்பொருளில் (PICME) பதிவு செய்து பயன்பெறலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தங்களின் கர்ப்ப கால விவரங்களை நேரடியாக பொது சுகாதாரத் துறையின் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்ற மென்பொருள் மூலமாக பதிவு செய்யலாம்.
மேலும், 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், வீட்டின் அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலமும், தாங்களாகவே picme.tn.gov.in/picme_public  என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் Pre-registration எண்ணைப் பெறலாம். அதைத்தொடர்ந்து நகர சுகாதார செவிலியர்கள், ஒருவார காலத்துக்குள் கர்ப்பிணிகள் பதிவு செய்த விவரங்களைக் கொண்டு, பதிவு செய்து RCH ID (Reproductive and Child Health ID)  அடையாள அட்டையை வழங்க வேண்டும். 
தேவையான கர்ப்பகால சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், மருத்துவ பரிசோதனைக்கேற்ப சிகிச்சைகள், தொடர் பராமரிப்பு மற்றும் தகுந்த ஆலோசனைகள் வழங்கவும், கர்ப்பகாலத்திலும், பிரசவத்தின்போதும் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும், அவசர உதவிக்கும் இந்த சேவை பெரிதும் துணை புரியும்.
மேலும், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு பதிவு எண் மிகவும் அவசியம். நகர சுகாதார செவிலியரிடம் கர்ப்ப விவரங்களை பதிவு செய்தால், கர்ப்பகால, பிரசவகால மற்றும் தடுப்பூசி சேவைகள் குறித்த நினைவூட்டல் குறுஞ்செய்திகள் பெற முடியும்.
கர்ப்பிணிகள் பிரசவத்துக்கு தாய் வீடு சென்றால் ஓரிரு மாதங்களுக்கு முன்பே, அந்தந்த பகுதியைச் சார்ந்த நகர சுகாதார செவிலியரிடம் தங்களின் கர்ப்பகால விவரங்களை தெரிவிக்க வேண்டும். அந்த நகர சுகாதார செவிலியர்கள் அந்தக் கர்ப்பிணிகள் குறித்த விவரங்களை அந்தப் பகுதியைச் சார்ந்த நகர சுகாதார செவிலியர்களிடம் தெரிவிப்பார்கள். இதனால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் தவறாமல் வழங்கப்படும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு picmehelp desk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com