எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.7.22 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்: நால்வர் கைது

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.7.22 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.7.22 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு வரும் சேது விரைவு ரயிலில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த சேது விரைவு ரயிலிலிருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது, அந்த ரயிலில் இருந்து அதிக எடையுள்ள பைகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் இறங்கி வந்த 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவர்கள் வைத்திருந்த பைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இச்சோதனையில், அந்த பைகளில் ரூ.7.22 கோடி மதிப்புள்ள 23.1 கிலோ எடையுள்ள 123 தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. 
இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுதொடர்பாக அந்த தங்கக்கட்டிகளை கடத்தி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 பேரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த தங்கக் கட்டிகள் இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேசுவரத்துக்கு கடத்தி வந்ததும், அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
193 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: சென்னை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, இந்த நிதியாண்டில் ரூ.57 கோடி மதிப்புள்ள 193 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. 
இதுதொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com