வலிக்குத் தீர்வு கண்டால் கருணைக் கொலை அவசியமில்லை

நீடித்த நோய்களால் அவதிப்படுவோரின் வலிக்குத் தீர்வு கண்டால் கருணைக் கொலைக்கு அவசியமில்லாமல் போய்விடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வலிக்குத் தீர்வு கண்டால் கருணைக் கொலை அவசியமில்லை

நீடித்த நோய்களால் அவதிப்படுவோரின் வலிக்குத் தீர்வு கண்டால் கருணைக் கொலைக்கு அவசியமில்லாமல் போய்விடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கையின் இறுதி நாள்களோடு போராடிக் கொண்டிருப்போர் இன்னல்படாமல் உயிரைத் துறப்பதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். எனவே, விதிகளுக்குட்பட்டு கருணைக் கொலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
புற்றுநோய், எச்ஐவி எய்ட்ஸ், நாள்பட்ட கல்லீரல பாதிப்பு, சீறுநீரகங்கள் செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்நாளின் இறுதிநாள்களை வலியோடு கடந்து வருகின்றனர். சிலர் சுயநினைவின்றி பல நாள்களாக சிகிச்சைப் பெற்று வருவோரும் உள்ளனர். இவர்களில் சுயநினைவு மீள வழியில்லாமல், சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், உறவினர்களின் சம்மதத்தின் பேரில், அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ உபரகணங்களின் செயல்பாட்டை நீக்குவது, மருந்துகளை நிறுத்துவது போன்ற செயல்களைச் செய்வது போன்றவை வரவேற்கத்தக்கது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 
கடனுக்கு ஆளாகும் உறவினர்கள்: சென்னையைச் சேர்ந்த 80 வயது ஆண் நோயாளி. சிறுநீரகமும், நுரையீரலும் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குணப்படுத்த முடியாது என்று அறிந்தும், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போரை உறவினர்களும் பார்க்க இயலாது. உண்மை நிலவரத்தை உறவினர்களிடம் தெரிவிக்காததால், தொடர்ந்து அவர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவழித்துக் கொண்டே இருந்தனர்.
நடுத்தர அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் இதுபோன்று தனியார் மருத்துவமனைகளில் தங்கள் பணம், சொத்து முழுவதையும் இழந்து கடனுக்கு ஆளாகியுள்ளனர். இதுபோன்ற நிலையில் உள்ளவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறி நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்துவதே சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு: ஆனால், கருணைக் கொலை தொடர்பான உத்தரவை முறைப்படுத்தாமல் விட்டால் பலரும் இதனை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, மூளைச்சாவை அறிவிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போன்று, கருணைக் கொலை தொடர்பான விதிமுறைகளையும் சரியாக வகுக்க வேண்டும். இதுதொடர்பாக இறுதி கட்ட நோயாளிகளுக்கான ஆதரவு சிகிச்சையை அளித்து வரும் டாக்டர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர் கூறியது: உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், கருணைக் கொலை தொடர்பான சரியான விதிகளை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்பதற்காக மாநில அளவிலும் அந்தந்த மருத்துவமனைகளின் அளவிலும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட வேண்டும். 
ஒவ்வொரு நோயாளியின் கலாசாரம், அவர்கள் பின்பற்றும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். சரியான விதமுறைகள் உருவாக்கவில்லை என்றால், அதைத் தவறாக நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது என்றார் அவர்.
வலிக்கு மருத்துவம்: இறுதிக்கட்ட நோயாளிகளில் பெரும்பாலானோர் வலியினால் அவதிப்படுவோர்தான். அவர்களின் வலியைப் போக்கிவிட்டால், சாக வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. உலக சுகாதார நிறுவனம் 2014-ஆம் ஆண்டே ஆதரவு சிகிச்சை மற்றும் வலி நிவாரண மருத்துவத்தை, அந்தந்த நாடுகளின் சிகிச்சைத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை இந்த சிகிச்சை முறை தற்போதுதான் உருவாகத் தொடங்கியுள்ளது.
விழிப்புணர்வு இல்லை: நீடித்த நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து இந்திய மருத்துவப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதனால் பெரும்பாலான மருத்துவர்களுக்கு, இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு வலி நிவாரண சிகிச்சை அளிப்பது அல்லது வலி நிவாரண சிகிச்சை மையங்களுக்கு அவர்களைப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
இதுதொடர்பாக ஆதரவு சிகிச்சை மற்றும் வலி நிவாரண மருத்துவ நிபுணர் மல்லிகா திருவதனன் கூறியது: இந்தியாவில் முதலில் நாள்பட்ட மற்றும் நீடித்த நோய்களால் அவதிப்படுவோருக்கு ஆதரவு சிகிச்சை மற்றும் வலி நிவாரண சிகிச்சை அளிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு அவற்றை மேம்படுத்திய பின்னரே, கருணைக் கொலை முறையைக் குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால் வலியில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை அளித்துவிட்டால் கருணைக் கொலை என்பதற்கு அவசியமே இருக்காது என்றார்.

90 சதவீதம் பேர் இறக்க விரும்பவில்லை!

அமெரிக்க மயக்கவியல் சங்கத்தின் சார்பில், நீடித்த நோய்களால் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் உள்ளோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 90 சதவீதம் பேர் தாங்கள் இறக்க விரும்பவில்லை என்றே தெரிவித்துள்ளனர். தாங்கவொண்ணா வலியைப் போக்குவதற்கு ஏதேனும் வழி இருந்தால் மட்டும் போதும் என்றும் கூறியுள்ளனர். 
எனவே, இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு அவர்களது வலியைப் போக்கும் அல்லது வலியை மறத்துப் போகச் செய்யும் சிகிச்சைகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் குறுகிய வாழ்நாளையும் மகிழ்ச்சியாக வாழச் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com