கப்பல்கள் மோதிய விபத்து: 2 வாரங்களில் ரூ.141 கோடியை அளிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அருகே கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் கப்பல் நிறுவனங்கள் அரசிடம் வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ள தொகை ரூ.141 கோடியை
கப்பல்கள் மோதிய விபத்து: 2 வாரங்களில் ரூ.141 கோடியை அளிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அருகே கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் கப்பல் நிறுவனங்கள் அரசிடம் வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ள தொகை ரூ.141 கோடியை 14 நாள்களிலும், மீதமுள்ள தொகைக்கான வங்கி உத்தரவாதத்தை 21 நாள்களிலும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரானில் இருந்து எரிவாயு ஏற்றுக் கொண்டு சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு வந்த கப்பல் எரிவாயுவை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இறக்குமதி செய்து விட்டு ஈரான் நாட்டுக்குப் புறப்பட்டது. அப்போது, மும்பையில் இருந்து காஞ்சிபுரம் டான் என்ற கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு எண்ணூர் துறைமுகத்துக்கு வந்தது. எதிர்பாராத விதமாக இரண்டு கப்பல்களும் மோதிக் கொண்டன.
கடலில் கொட்டிய எண்ணெய் படலத்தின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் சார்பில் இழப்பீடு கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து மீனவர்களுக்கு இழப்பீடாக ரூ.240 கோடி வழங்க இரண்டு கப்பல் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இழப்பீடு வழங்குவது தொடர்பாக இரண்டு கப்பல் நிறுவனங்களும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. மேலும் சென்னை காமராஜர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது கப்பல்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கப்பல் நிறுவனங்கள் சார்பில் வழக்குத் தொடர்ந்தன. இந்த சம்பவம் தொடர்பாக மீனவர்கள் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால்,எஸ்.வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு கப்பல் நிறுவனங்களும் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 15 கோடி வழங்கி உள்ளதாகவும், தற்போது ரூ.141 கோடி கோடியை அரசிடம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கப்பல் நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'ரூ.141 கோடியை அரசிடம் 14 நாள்களில் வழங்க வேண்டும். எஞ்சிய தொகைக்கு 21 நாள்களில் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் காமராஜர் துறைமுகத்தின் சுற்றுச்சூழல் துறை கோரிய ரூ.5.68 கோடியை 7 நாள்களில் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்தனர். 
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், காஞ்சிபுரம் கப்பலை விடுவிக்கலாம்' என உத்தரவிட்டுள்ளனர். மீனவர்கள் இழப்பீடு கோரும் மனுக்களை உரிய பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com