குரங்கணி தீ விபத்து: சென்னை டிரெக்கிங் கிளப் அலுவலகத்தில் தேனி போலீஸார் ஆய்வு

தேனி மாவட்டம், குரங்கணி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 12 பேர் இறந்த வழக்குத் தொடர்பாக, சென்னை பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரெக்கிங்

தேனி மாவட்டம், குரங்கணி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 12 பேர் இறந்த வழக்குத் தொடர்பாக, சென்னை பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரெக்கிங் கிளப் அலுவலகத்தில் தேனி போலீஸார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
குரங்கணி தீ விபத்து தொடர்பாக தேனி மாவட்ட போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில், மலையேற்றத்துக்கு (டிரெக்கிங்) சென்றவர்கள், வனத் துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை எனப் புகார் கூறப்படுகிறது. அதேவேளையில், தங்களது கிளப் மூலம் டிரெக்கிங் சென்றவர்கள், வனத் துறையிடம் முறையான அனுமதி பெற்றதாக சென்னை டிரெக்கிங் கிளப் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தது.
இருப்பினும், சென்னை பாலவாக்கத்தில் செயல்பட்டு வரும் டிரெக்கிங் கிளப் நிறுவனரான, பெல்ஜியத்தைச் சேர்ந்த பீட்டர் வேன்ஹீத் (46) என்பவரை போலீஸார் இது தொடர்பாக தேடி வருகின்றனர். ஆனால் பீட்டர், 11 -ஆம் தேதி இரவு முதல் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து கடந்த திங்கள்கிழமை சென்னை பாலவாக்கம் விஜிபி அவென்யூ இரண்டாவது பிரதான சாலையில் உள்ள பீட்டரின் வீடாகவும், சென்னை டிரெக்கிங் கிளப் அலுவலகமாகவும் செயல்பட்டு வந்த ஒரு வீட்டை நீலாங்கரை போலீஸார் சோதனையிட்டனர். இதேபோல் அந்த வீட்டை, வருவாய்த் துறை அதிகாரிகளுடம் சோதனையிட்டனர். இதன் பின்னர், அங்கு பாதுகாப்புக்காகவும், கண்காணிப்புக்காகவும் போலீஸார் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேனி போலீஸார் விசாரணை: இந்நிலையில், தேனி மாவட்டம், சின்னமன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் இம்மானுவேல் ராஜ்குமார் தலைமையில் 4 போலீஸார் புதன்கிழமை பாலவாக்கத்தில் உள்ள பீட்டர் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் ஆய்வு மேற்கொண்ட தேனி போலீஸார், பின்னர் நீலாங்கரை காவல் நிலையத்துக்குச் சென்றனர்.
அங்கு சென்னை டிரெக்கிங் கிளப் குறித்தும், பீட்டர் குறித்தும் தகவல்களைக் கேட்டறிந்தனர். இதன் அடுத்தக் கட்டமாக சென்னை டிரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com