தனியார் நிதிநிறுவனத்துக்கு எதிரான புகார்: நடவடிக்கைக்கு உத்தரவு

போலி கையொப்பம் மூலம் ஜாமீன்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ஸ்ரீராம் நிதிநிறுவன அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரில் முகந்திரம் இருந்தால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யலாம்

போலி கையொப்பம் மூலம் ஜாமீன்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ஸ்ரீராம் நிதிநிறுவன அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரில் முகந்திரம் இருந்தால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீராம் நிதிநிறுவனத்தில் சத்தியநாரயணராவ் என்பவர் பெற்ற கடனுக்கு நான் ஜாமீன் அளித்துள்ளதாகவும், அந்தத் தொகையை வட்டியுடன் நான் செலுத்த வேண்டும் என ஸ்ரீராம் நிதி நிறுவனம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியது. நிதி நிறுவனம் தொடர்ந்து எனக்கு நோட்டீஸ் அனுப்பியதால், 
நிறுவனத்துக்குச் சென்று விசாரித்தேன். அப்போது விஜயகுமார் என்ற நபர் எனது ஊதிய ரசீது உள்ளிட்ட இதர 
ஆவணங்களைப் பயன்படுத்தி எங்களது கையொப்பத்தை ஜாமீனதாரர்கள் என போலியாக போட்டு நிதிநிறுவன ஊழியர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நான் அளித்த புகாரின் பேரில் ஜாம்பஜார் போலீஸார் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து இது போன்ற நடவடிக்கைகளை அறிவுறுத்தினர். 
இந்த நிலையில் சரவணன் என்பவருக்கு நான் ஜாமீன் வழங்கியதாகக் கூறி, அவர் பெற்ற கடன்தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.15.46 லட்சத்தை செலுத்த வேண்டும் என கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை 10-ஆவது நகர சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். அந்த புகார் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்தப் புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே எனது கையொப்பத்தை போட்டு ஜாமீன்தாரராக குறிப்பிட்டு மோசடியில் ஈடுபட்ட விஜயகுமார் மற்றும் ஸ்ரீராம் நிதிநிறுவன அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் ஓட்டேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com