நிரந்தர தபால் தலை கண்காட்சியில் மகளிர் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டு தபால் தலைகள்

உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நாடுகளால் மகளிர் மேம்பாட்டு குறித்து வெளியிடப்பட்ட தபால்தலைகள் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக
நிரந்தர தபால் தலை கண்காட்சியில் மகளிர் மேம்பாடு தொடர்பான வெளிநாட்டு தபால் தலைகள்

உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நாடுகளால் மகளிர் மேம்பாட்டு குறித்து வெளியிடப்பட்ட தபால்தலைகள் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள நிரந்தர தபால் தலை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நிரந்தர தபால்தலை கண்காட்சி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் இந்திய சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியா, தபால் தொலைத் தொடர்பு, குழந்தைகள் குறித்தான சிறப்பு இசை உள்ளிட்ட நான்கு தலைப்புகளில் இதுவரை கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி 27 பள்ளிகளைச் சேர்ந்த 1,768 மாணவர்களும் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் உலக மகளிர் தினத்தையொட்டி மகளிர் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல், கல்வி, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்வேறு நாடுகளால் மகளிர் குறித்து வெளியிடப்பட்ட ஏரானமான தபால்தலைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 
தபால் தலைகளைச் சேகரிக்கும் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை குழந்தைகளிடையே ஏற்படுத்துவதே இக்கண்காட்சியின் முதன்மை நோக்கம். இந்த கண்காட்சிக்கு இடையே தபால்தலைகள் குறித்த குறும்படங்களும் பள்ளி குழந்தைகளுக்கு திரையிடப்படுகிறது. அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை ஆறு மணிவரை இந்தக் கண்காட்சியை பார்வையிடலாம். தபால் துறையால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து தபால்தலைகளும் இந்த இடத்தில் விற்பனையும் செய்யப்படுகிறது. இராமாயணம், மகாபாரதம் குறித்த வண்ண மயமான தபால்தலை தொகுப்புகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ரூ.300 பணம் செலுத்தி தங்களுடைய புகைப் படத்தை தபால் தலைகளாக வடிவமைத்துப் பெற்றுக் கொள்ளலாம். 
தபால்தலை அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சத் தொகையாக ரூ.200 செலுத்தி தபால்தலை இருப்புக் கணக்கையும் தொடங்கலாம். இதன்மூலம் இத்துறையால் வெளியிடப்படும் அனைத்து தபால்தலைகளையும் நேரடியாக வீட்டு முகவரிக்கே தபால் மூலம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்தக் கண்காட்சியோடு சென்னை நகரில் உள்ள நூற்றுக்கும் அதிகமான பள்ளிகளில் தபால்தலை பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்படுகின்றன. தபால்தலையால் கிடைக்கும் நன்மைகள், தபால்தலை சேகரித்தல் மற்றும் அவற்றை கண்காட்சிகளுக்கு எவ்வாறு தொகுத்தல் என்பது குறித்து இங்கு நடத்தப்படும் பயிற்சி பட்டறைகளில் விவரிக்கப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com