ஏற்றுமதியாளர்கள் செலுத்திய ஜிஎஸ்டியை திரும்பப் பெற இருவார சிறப்பு முகாம்

ஏற்றுமதியாளர்கள் செலுத்திய சரக்கு மற்றும் சேவை வரியைத் திரும்பப் பெற முடியாதவர்கள் பயன்பெறும் வகையில் இருவார சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று சென்னை மண்டல

ஏற்றுமதியாளர்கள் செலுத்திய சரக்கு மற்றும் சேவை வரியைத் திரும்பப் பெற முடியாதவர்கள் பயன்பெறும் வகையில் இருவார சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று சென்னை மண்டல சுங்கத் துறை முதன்மை ஆணையர் அஜித்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியது:
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதிக்கான பொருள்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கும் திட்டம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. முன்பு இதற்கென பாரம் 'எச்' கொடுப்பது வழக்கம். தற்போது சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்றுமதியின்போது ஐ.ஜி.எஸ்.டி என்ற பெயரில் வரி விதிக்கப்படுகிறது. 
ஆனால் இந்த வரியை ஏற்றுமதி செய்ததற்கான அனைத்து ஆவணங்களையும் ஜி.எஸ்.டி போர்டலில் பதிவேற்றம் செய்த பிறகு ஏற்றுமதியாளர்கள் செலுத்திய வரி தானாகவே அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கான சிறப்பு மென்பொருள் வடிவமைக்கப்பட்டு சுங்கத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஏற்றுமதியின்போது சுங்கத் துறை வலைதளத்தில் பதிவு செய்யும் தகவல்கள், ஜிஎஸ்டி போர்டலில் பதிவேற்றம் செய்தல் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட சிறு பிழைகள், தவறுகள் காரணமாக வரியைத் திரும்பச் செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளன. 
ஏற்றுமதியாளர்களுக்கு ரூ. 2,318 கோடி பாக்கி: கடந்த டிசம்பர் மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்ட ஏற்றுமதி ஆவணங்களுக்குத் தானாகவே திருப்பி வழங்கப்பட்ட ஜிஎஸ்டி வரி ரூ. 476 கோடி. ஆனால் இதுவரை திருப்பித் தரவேண்டிய பாக்கித் தொகை ரூ. 2,318 கோடியாக உள்ளது. செலுத்தப்பட்ட வரியில் சுமார் 83 சதவீதம் ஏற்றுமதியாளர்களுக்குத் திருப்பித் தரவேண்டியது உள்ளது.
மார்ச் 29 வரை சிறப்பு முகாம்: ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக துரித நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து சென்னை மண்டல சுங்கத் துறை சார்பில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்க இல்லத்தில் சிறப்பு முகாம் மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏற்றுமதியாளர்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல், அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இதற்கான விரிவான விவரங்கள் சுங்கத் துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com