அம்பத்தூரில் பராமரிப்பில்லாத சாலைகள்: அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

அம்பத்தூர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அம்பத்தூர் ஓ.டி. பகுதிக்குட்பட்ட ஸ்கூல் தெருவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள பாதாள சாக்கடை மூடி.
அம்பத்தூர் ஓ.டி. பகுதிக்குட்பட்ட ஸ்கூல் தெருவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள பாதாள சாக்கடை மூடி.

அம்பத்தூர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியான அம்பத்தூர் ஓ.டி., சென்னை பெருநகர மாநகராட்சியின் 7 -ஆவது மண்டலத்தில் அடங்கியுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 4.78 லட்சம் பேர் வசிக்கின்றனர். அம்பத்தூரில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் சிறு, குறு, பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களும் பல உள்ளன. மேலும், 30 -க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 4 கல்லூரிகள், 10 -க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் என வளர்ந்துவரும் பகுதியாக உள்ளது.

அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள 20 -க்கும் மேற்பட்ட தெருக்கள், ரயில் நிலையம் அமைந்துள்ள வெங்கடாபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர், ஸ்கூல் தெரு, எம்டிஎச் சாலை, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பட்டமாள் தெரு, சூரிய பிரகாசம் தெரு உள்ளிட்ட பெரும்பாலான தெருக்கள், ஆவடிச் சாலையுடன் இணையும் சிறிய தெருக்கள் என 50 -க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள சாலைகள் பெரும்பாலானவற்றில் பாதாள சாக்கடை புதைக் குழாய் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதாள சாக்கடையுடன் வீடுகளுக்கு இணைக்கும் குழாய்கள் பதிக்கும் பணிக்காக பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் போனதால் அவை மேடுபள்ளமாக அமைந்துள்ளன. அத்துடன் தெருக்களின் நடுவே செல்லும் பாதாள சாக்கடை மூடி அமைப்பும், சாலையுடன் சமமாக இல்லாமல் பல இடங்களில் பள்ளமாகவும், சில இடங்களில் மேடாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒருசில இடங்களில் பாதாள சாக்கடை மூடி அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் தார்ச்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் இப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மூடிகள் அமைந்துள்ள பள்ளங்களில் தவறி வாகனத்தை செலுத்தும்போது விபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணாபுரம் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் எம்.சாண்ட், செங்கல் உள்ளிட்டவை சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன. 

அத்துடன் பல இடங்களில் தெருக்களில் கட்டட இடிபாடுகள் பல கொட்டப்பட்டு கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பட்டுள்ளன. இதனால் தெருக்களில் பல நேரங்களில் கழிவுநீர் ஓடும் நிலை உள்ளதாக பாதிக்கப்படுவோர் கூறுகின்றனர். மேலும், ம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், அதையொட்டி அமைந்துள்ள முக்கிய வணிகப் பகுதிகளில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகி வருவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள எம்டிஎச் சாலையிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.

உடனடியாக தொடர்புடைய நிர்வாகத்தினர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலைகளிலும், தெருக்களிலும் மேடு, பள்ளமாக அமைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகள் அமைக்கப்பட்ட இடங்களை விபத்து ஏற்படாத வண்ணம் சீரமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படும் வகையில் கழிவுப் பொருள்களை கொட்டுவோர் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அம்பத்தூர் பகுதி குடியிருப்புவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com