நிமோனியா தடுப்பூசி: பணவிரயத்தைத் தடுக்கும்! டாக்டர் வி.எஸ்.நடராஜன்

"நிமோனியா' எனப்படும் நெஞ்சு சளி சார்ந்த நோய்க்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் சிகிச்சைக்கான பண விரயத்தைத் தடுக்க முடியும் என்று முதியோர் மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராஜன் கூறினார்.
நிமோனியா தடுப்பூசி: பணவிரயத்தைத் தடுக்கும்! டாக்டர் வி.எஸ்.நடராஜன்

"நிமோனியா' எனப்படும் நெஞ்சு சளி சார்ந்த நோய்க்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் சிகிச்சைக்கான பண விரயத்தைத் தடுக்க முடியும் என்று முதியோர் மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராஜன் கூறினார்.
 உலக நிமோனியா விழிப்புணர்வு தினத்தை (நவ.12) முன்னிட்டு சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு இந்திய மருத்துவ சங்க வில்லிவாக்கம் கிளை, பில்ராத் மருத்துவமனை, டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்தப் பேரணியை டாக்டர் வி.எஸ்.நடராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
 ""சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12-ஆம் தேதியை "உலக நிமோனியா தினமாக' உலக சுகாதார நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு நெஞ்சு சளி சார்ந்த நோய் ("நிமோனியா') முதன்மை காரணமாக உள்ளது. முதியவர்களின் இறப்பைப் பொருத்தவரை மாரடைப்பு, பக்கவாதத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது காரணமாக நெஞ்சு சளி சார்ந்த நோய் உள்ளது.
 நோய்க்கான காரணிகள் என்ன? வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைக் காளான்களால் ஏற்படும் நெஞ்சு சளி சார்ந்த நோய் ("நிமோனியா') ஏற்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் சர்க்கரை நோய், புகை பிடித்தல், மது அருந்துதல், ஆஸ்துமா, நாள்பட்ட நெஞ்சு சளி பிரச்னை உள்ளோர், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர், சிறுநீரக பாதிப்பு உள்ளோர், ஸ்டீராய்டு மருந்துகள், புற்றுநோய்க்கு அளிக்கப்படும் மருந்துகள் ஆகியவை காரணமாக "நிமோனியா' வர வாய்ப்பு உண்டு.
 அறிகுறிகள் என்ன?: இருமல், சளியோடு சேர்ந்த இருமல், காய்ச்சல், உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கு அடைப்பு, தொண்டைக்கட்டு ஆகியவை "நிமோனியா'வின் அறிகுறிகளாகும். மார்பு எக்ஸ் ரே, ரத்தம், சளி பரிசோதனைகள் மூலம் "நிமோனியா'வை உறுதிப்படுத்தி விட முடியும்.
 தடுக்க முடியும்: "நிமோனியா'வை தடுப்பூசி மூலம் எளிதில் தடுக்க முடியும். 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆயுளுக்கு ஒரே ஒரு முறை நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதும். இந்தத் தடுப்பூசி மருந்தினால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. முதியோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் உள்ளோருக்கு முக்கியமாக குழந்தைகளுக்கு "நிமோனியா' வராமல் தடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கும் தடுப்பூசி மருந்து அட்டவணையின்படி "நிமோனியா' தடுப்பூசி போட்டு விடுவது நல்லது.
 நோய் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளித்து முழுமையாகக் குணப்படுத்த முடியும். எனினும் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பண விரயமாவது தடுக்கப்படுகிறது'' என்றார் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.
 பொது மக்களுக்கு விளக்கம்: இந்த நிகழ்ச்சியில் "நிமோனியா' குறித்த பொது மக்களின் கேள்விகளுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் வில்லிவாக்கம்-அயனாவரம் கிளை தலைவர் டாக்டர் எஸ்.ஜெயராமன் விளக்கம் அளித்தார்.
 இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவர் டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால், சங்கத்தின் கௌரவ மாநிலச் செயலர் டாக்டர் பி.ஸ்ரீதர், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் (வடக்கு மண்டலம்) டாக்டர் எல்.யசோதா, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் (கிழக்கு மண்டலம்) டாக்டர் செங்குட்டுவன், சங்கத்தின் மருத்துவ சிறப்புக் கல்வி அகாதெமியின் செயலர் டாக்டர் சி.அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com