துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட கடலோரக் காவல் படை மாசுக் கட்டுப்பாடு சிறப்புக் கப்பல் சமுத்ரா பகரேதார்.
துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட கடலோரக் காவல் படை மாசுக் கட்டுப்பாடு சிறப்புக் கப்பல் சமுத்ரா பகரேதார்.

காமராஜர் துறைமுகத்தில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நிறைவு: இன்று இறுதி ஆய்வு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து குழாய்கள் மூலம் பர்னஸ் ஆயிலை அகற்றும்போது ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.


எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து குழாய்கள் மூலம் பர்னஸ் ஆயிலை அகற்றும்போது ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இறுதிக்கட்டமாக புதன்கிழமை ஆய்வு நடத்தப்படவுள்ளது.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எண்ணூர் டேங்க் டெர்மினல் லிமிடெட் என்ற தனியார் கடல்சார் திரவ முனையத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு எம்.டி. கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பல் வந்தடைந்தது. பின்னர் கப்பலில் இருந்த பர்னஸ் ஆயிலை இறக்கும் பணியில் ஈடுபட்டபோது முனையத்துக்கும், கப்பலுக்கும் இடையே இருந்த இணைப்புக் குழாயிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. சுமார் 2 டன் அளவுக்கு பர்னஸ் எண்ணெய் கடல் நீரில் பரவியதை அடுத்து கடந்த மூன்று நாள்களாக எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி நடைபெற்றது.
மேலும் கடலோரக் காவல் படையின் சிறப்புக் கப்பலான சமுத்ரா பகரேதார் விசாகப்பட்டினத்திலிருந்து வரவழைக்கப்பட்டு கடந்த இரு நாள்களாக இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி நிறைவு பெற்றதாக கடலோரக் காவல்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று ஆய்வுக் கூட்டம்: இதுகுறித்து காமராஜர் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது:
கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளால் எண்ணெய்க் கசிவு முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. சமுத்ரா பகரேதார் கப்பல் மூலம் முற்றிலும் எண்ணெய்க் கசிவு அகற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் புதன்கிழமை நடைபெறும் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை அடுத்து முறைப்படி அறிவிக்கப்படும். இக்கூட்டத்தில் துறைமுகம், கடலோரக் காவல்படை, கப்பல் நிறுவனம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
செலவினம் வசூலிக்க நடவடிக்கை: எண்ணெய்க் கசிவு சம்பவம் குறித்து கடலோரக் காவல்படை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கப்பல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணிக்கான அனைத்து செலவினங்களும் கப்பல் நிறுவனத்திடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னரே கப்பலை விடுவிப்பது குறித்து கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் முடிவு செய்யும் என்றார் ரவீந்திரன்.
புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகே சிறப்புக் கப்பல் சமுத்ரா பகரேதார் இருப்பிடம் திரும்பும் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com