சமரசத் தீர்வு மையத்தை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் சமரசத் தீர்வு மையத்தை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்தின் முதுநிலை அறிவுரையாளர் வழக்குரைஞர் ஜி.சசிதேவி தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் சமரசத் தீர்வு மையத்தை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்தின் முதுநிலை அறிவுரையாளர் வழக்குரைஞர் ஜி.சசிதேவி தெரிவித்தார்.
 சேலையூர் பாரத் சட்டக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நீதித்துறையில் சமரசத் தீர்வுக்கான நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அவர் பேசியது:
 நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இழுபறி நிலையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கில் தேங்கி உள்ளன. இந்நிலையில் நீதிமன்ற ஒப்புதலுடன், வழக்குத் தொடர்பாக இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு கிடைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சமரசத் தீர்வு மையம் செயல்பட்டு வருகிறது.
 பெரும்பாலான வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்பு இருதரப்பினரில் ஒரு தரப்பினருக்கு இழப்பு, ஏமாற்றம், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் சமரசத் தீர்வு மையத்தில் கையாளப்படும் வழக்குகளில் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை.
 இருதரப்பினரின் மனப்பூர்வ சம்மதத்தின் அடிப்படையில் வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம்.
 சமரசத் தீர்வு முறை மூலம் காலதாமதம், மனஉளைச்சல், பண இழப்பு உள்ளிட்ட பல்வேறு இடர்ப்பாடுகள் தவிர்க்கப்பட்டு பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதால் பலர் சமரசத் தீர்வு மைய உதவியை நாடுவது அதிகரித்துள்ளது என்றார் வழக்குரைஞர் ஜி.சசிதேவி.
 தமிழ்நாடு முதுநிலை அறிவுரையாளர் வழக்குரைஞர் டி.சாய்கிருஷ்ணன், துறை அலுவலர் ஜி.அனந்தராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் எஸ்.கஜேந்திரராஜ், பேராசிரியர் ஆர்.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com