திருவொற்றியூர் தேரடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் தேரடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.


திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் தேரடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் தேரடியின் இருபுறமும் சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்பால், வாகனங்கள் செல்லுவதற்கு சிரமமாக இருந்தது. மேலும் திருக்குளத்தின் வடக்குப் பகுதியில் மாட்டு வண்டிகள், ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அதோடு இப் பகுதி சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றன.
இதேபோல தெற்குப் பகுதியில் பூக்கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் தாண்டி சுமார் 20 அடி தூரத்துக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதனால் மழைநீர் குளத்துக்குள் சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது.மேலும் குளத்தை முழுமையாகச் சுற்றி வர முடியாத நிலை நிலவுகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தியாகராஜர் கோயில் உதவி ஆணையர் சித்ராதேவி, மாநகராட்சியிடமும், காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதன் விளைவாக அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் கட்டமாக திருக்குளத்தின் தெற்குப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. சாலையை ஆக்கிரமித்திருப்பவர்கள், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடைக்காரர்களிடம் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் அறிவுறுத்தினார். இதை ஏற்று ஒரு சில நாள்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுவதாக வியாபாரிகள் உறுதி அளித்தனர்.
மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுடன், குளக்கரையைத் தூய்மைப் பகுதியாக மேம்படுத்த வேண்டும். மழைநீர் திருக்குளத்துக்கு வரும் வகையில் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com