வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது
வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவை கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப் பூச்சி பூங்காவை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் என பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

 அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்கா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், 40 வகையான வண்ணத்துப் பூச்சி இனங்கள் வருகை புரிந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்தது.
 குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும் இந்த வண்ணத்துப் பூச்சிகள் வருகின்றன.
 கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வர்தா புயலால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் இல்லம் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து மீண்டும் வண்ணத்துப்பூச்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த 2 மாதமாக இப்பகுதி மூடப்பட்டு, பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த நிலையில், பூங்காவுக்குள் புதிய செடிகள் நடப்பட்டு உள்அரங்கமும் சீரமைக்கப்பட்டது.
 இதனால் வண்ணத்துப் பூச்சிகள் இப்பகுதிக்கு மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் இப் பூங்காவை பார்வையிட ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை (அக். 21) திறக்கப்பட்டது.
 புதுப்பொலிவுடன் கூடிய இப்பூங்காவை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com