பட்டாக்கத்தி விவகாரம்: மாநிலக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் இடைநீக்கம்

மாநகரப் பேருந்தில் பட்டாக் கத்திகளுடன் வந்த 4 மாணவர்களை இடை நீக்கம் செய்து சென்னை மாநிலக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


மாநகரப் பேருந்தில் பட்டாக் கத்திகளுடன் வந்த 4 மாணவர்களை இடை நீக்கம் செய்து சென்னை மாநிலக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29 -ஆம் தேதி, சென்னை பாரிமுனையிலிருந்து காரனோடை நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் சிலர், பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியை சாலையில் உரசி தீப்பொறியை பறக்கவிட்டு சென்றனர். இது அந்தச் சாலை வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 
இதுகுறித்து விசாரணை நடத்தியப் போலீஸார், அவர்கள் மாநிலக் கல்லூரியில் படித்துவரும் மாணவர்கள் என்பதைக் கண்டறிந்தனர். பின்னர், அவர்கள் 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், அந்த நான்கு மாணவர்களையும் இடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராவணன் கூறியது:
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 4 பேரையும் இடைநீக்கம் செய்துள்ளோம். அந்த மாணவர்கள் ஜாமீனில் வெளிவந்ததும், அவர்களும் அவர்களுடைய பெற்றோரும் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு முன் விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்படுவர். 
இதற்காக, பதிவுத் தபால் மூலம் அந்த நான்கு மாணவர்களின் முகவரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையில் அவர்களின் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு கல்லூரியிலிருந்து நீக்கப்படுவர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com