வடகிழக்குப் பருவ மழை: மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை பராமரிக்க குடிநீர் வாரியம் வேண்டுகோள்

வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை நன்கு பராமரித்து வைக்க வேண்டும் என சென்னைக் குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை நன்கு பராமரித்து வைக்க வேண்டும் என சென்னைக் குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 இது தொடர்பாக அந்த வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மழைநீர் சேகரிப்புத் திட்டம், இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமாக தமிழகத்தில் செயல்படுத்தபட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளது. சென்னைக் குடிநீர் வாரியம் புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெறுவதற்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது மற்றும் பராமரித்தல் பற்றிய விழிப்புணர்வு சென்னை மாநகர மக்களிடையே ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 145 கண்காணிப்புக் கிணறுகளில், நிலத்தடி நீரின் அளவு மற்றும் நீரின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீரின் அளவும் தரமும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 இத்தகைய பயனைத் தொடர்ந்து பெற ஏதுவாக, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை, வடகிழக்குப் பருவமழை வருவதற்கு முன்பாக நன்குப் பராமரித்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்கள் வீடுகளிலுள்ள வடிகட்டும் தொட்டிகளில் நிரப்பியுள்ள மணல், கூழாங்கல், கருங்கல் ஆகியவற்றை வெளியே எடுத்து, அவற்றை நீரால் சுத்தம் செய்த பின்பு, மீண்டும் தொட்டியின் அடியில் கருங்கல், நடுவில் கூழாங்கல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலே மணல் என்ற முறைப்படி நிரப்ப வேண்டும். கட்டடங்களில் உள்ள மழைநீர்க் குழாய்களில் ஏதேனும் ஓட்டை , விரிசல் அல்லது அடைப்புகள் இருந்தால் அவற்றைச் சரி செய்து மழைநீர் வீணாகாமல் முழுவதும் பூமிக்குள் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
 பகுதி அலுவலகங்களில் ஆலோசனை பெறலாம்: மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைத்தல் மற்றும் பராமரிப்பதில் பொதுமக்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் பிரிவு அலுவலகங்களை அணுகி ஆலோசனை பெற்றுப் பயன் பெறலாம். சென்னைக் குடிநீர் வாரியத்தின் அலுவலர்கள் பொதுமக்களின் வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்வார்கள்.
 நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் அதன் தரமும் மேம்பாடு அடைந்து பயன்பெற பொதுமக்கள் தங்கள் வீடுகளிலுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை நன்கு பராமரிக்குமாறு சென்னைக் குடிநீர் வாரியம் கேட்டுக் கொள்கிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com