காவல் ஆய்வாளரை மிரட்டிய போலி ஐபிஎஸ் அதிகாரி கைது

சென்னை அபிராமபுரத்தில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக போலி ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை அபிராமபுரத்தில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக போலி ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ராஜாஅண்ணாமலைபுரம் கேசவபெருமாள்புரம் 15 -ஆவது மத்திய அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது பாரூக் மனைவி சுனைகாபேகம் (35). இவர் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகிறார். மேல்தளத்தில் சுனைகாபேகத்தின் கணவர் முகம்மது பாரூக்கின் சகோதரர் ராஜாமுகம்மது வசிக்கிறார். சிங்கப்பூரில் வசிக்கும் சுனைகாபேகம் அவ்வப்போது சென்னைக்கு வந்து, தனது வீட்டை பார்த்துச் செல்வாராம்.
இந்நிலையில் அவர் திங்கள்கிழமை தனது வீட்டுக்கு வந்தபோது அந்த வீட்டை ராஜாமுகம்மதுவும், அவரது குடும்பத்தினரும் ஆக்கிரமித்திருப்பதை அறிந்து சுனைகாபேகம், அவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலறிந்த அபிராமபுரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முற்பட்டனர்.
இதற்கிடையே ராஜாமுகம்மதுவுக்கு ஆதரவாக அங்கு நீலநிற சைரன் விளக்கு வைத்த காரில் வந்த ஒரு இளைஞர், தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்றும், இண்டர்போல் அதிகாரியாக இருப்பதாகவும் அறிமுகம் செய்துகொண்டு அங்கிருந்த போலீஸாரை மிரட்டினார். அதைத் தொடர்ந்து அவர் போலீஸாரை காவல் நிலையத்துக்கு செல்லுமாறும், தானே நேரில் இந்த விவகாரம் குறித்து பேச வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார், அபிராமபுரம் காவல் நிலையத்துக்கு திரும்பினர். சிறிது நேரத்தில் அதே காரில் வந்த அந்த நபரை கண்டதும் காவல் ஆய்வாளர் உள்பட அனைவரும் அவருக்கு சல்யூட்' அடித்து மரியாதை செலுத்தியுள்ளனர். காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரையும் அவர் மிரட்டியுள்ளார். ஆனால் சிறிதுநேரத்தில் அந்த நபரின் நடவடிக்கைகள் காவல் ஆய்வாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவரை விசாரித்தபோது அவர் போலி ஐபிஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.
விசாரணையில் அந்த நபர், மேற்கு மாம்பலம் குப்பையா தெருவைச் சேர்ந்த அ.சிவனேசன் (25) என்பதும், அவர் பட்டமேற்படிப்பு படித்துவிட்டு போலி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் சிவனேசனை கைது செய்தனர். மேலும் அவர், எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com