நெமிலிச்சேரி - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்

சென்னை நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் டிசம்பர் மாதத்தில்

சென்னை நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் இச்சாலை திறக்கப்படும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை புறநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை ரூ.1,075 கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்க தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இந்த வெளிவட்ட சாலையின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 
இதுகுறித்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியது: 
வண்டலூர் - நெமிலிச்சேரி வரையில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, ஏற்கெனவே மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து நெமிலிச்சேரியில் இருந்து திருவொற்றியூர், பொன்னேரி வழியாக மீஞ்சூர் வரையில் ரூ.1,075 கோடி செலவில் 30.3 கி.மீ தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஒட்டுமொத்த பணிகளும் முடியும் நிலையில் இருக்கின்றன.இந்த புதிய சாலை வரும் டிசம்பரில் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும். 
இதனால், சென்னை மாநகருக்கு பல்வேறு திசைகளில் இருந்து வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சென்னை மாநகருக்குள் நுழையாமல் எண்ணூர் துறைமுகம், புறநகர் தொழிற்சாலைகளுக்கு எளிதாக சென்றடைய முடியும். இதனால் சென்னையில் 30 முதல் 40 சதவீதம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். மேலும் வண்டலூர் - மீஞ்சூர் இடையே 2 முதல் 4 புதிய சுங்கச் சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com