சுங்கத் துறை ஆவணப் பரிசோதனை மையமாக மாறும் கன்டெய்னர் லாரிகள் நிறுத்தம்

சென்னை திருவொற்றியூரில் செயல்படாமலிருந்த கன்டெய்னர் லாரிகள் வாகன நிறுத்தம்
திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட உள்ள சுங்கத் துறை ஆவணப் பரிசோதனை மையம்.
திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட உள்ள சுங்கத் துறை ஆவணப் பரிசோதனை மையம்.


சென்னை திருவொற்றியூரில் செயல்படாமலிருந்த கன்டெய்னர் லாரிகள் வாகன நிறுத்தம் சுங்கத் துறை ஆவணப் பரிசோதனை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை (செப். 18) நடைபெற உள்ளது.
137 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 5.5 கோடி மெட்ரிக் டன் சரக்குகளும், சுமார் 15 லட்சம் சரக்குப் பெட்டகங்களும் கையாளப்படுகின்றன. இதற்காக தினமும் சுமார் 4 ஆயிரம் கனரக லாரிகள் துறைமுகத்துக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டும், சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் திருவொற்றியூரில் எண்ணூர் விரைவுச் சாலையில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சென்னைத் துறைமுகம் சார்பில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கன்டெய்னர் லாரிகள் நிறுத்த மையம் தொடங்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களினால், இத் திட்டம் தள்ளிப்போடப்பட்டு வந்தது.
இதற்கிடையே, கடந்த 2013-இல் 11.26 ஏக்கரில் மீண்டும் சென்னை துறைமுகம் சார்பில் வாகன நிறுத்தம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் அடுத்த சில மாதங்களில் இந்த வாகன நிறுத்தம் மூடப்பட்டது.
இந்நிலையில் இம்மையத்தை சுங்கத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சரக்குப் பெட்டக நிலையமாக மாற்றுவதுடன் புதிய வசதிகளை ஏற்படுத்துவது என முடிவு செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து பல்வேறு துறைகளின் தடையில்லாச் சான்றுகள், ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து சரக்குப் பெட்டக நிலையமாக அங்கீகாரம் அளித்து சுங்கத்துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக இந்த இடம் சுங்கத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து சரக்குப் பெட்டக நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டது. 
12 ஆண்டுகளுக்கு பின்னர்...
இதன் மூலம் பொதுமக்களின் அவதியைத் தீர்க்கவும், போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கவும் தொடங்கப்பட்ட முக்கியத் திட்டம் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் செயல்பாட்டுக்கு வருகிறது. இம் மையம் செயல்படாமலேயே கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ. 25 கோடி வரை வாடகை செலுத்தப்பட்டு, பல முறை திறப்பு விழாக் கண்டு, மீண்டும், மீண்டும் மூடப்பட்ட இம்மையம் புதிய வடிவத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது.
இங்கு சுமார் 300 கன்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைக்கவும், ஏற்றுமதி கன்டெய்னர்களுக்கான அனைத்து சோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டு காத்திருப்பின்றி நேரடியாகத் துறைமுகம் செல்லும் வசதி (ஈடஉ-ஈஐதஉஇப டஞதப உசபதவ) செவ்வாய்க்கிழமையே தொடங்கிடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மத்திய கிடங்கு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
திறப்பு விழா: இதன் திறப்பு விழா, திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை (செப். 18) நடைபெற உள்ளது. இதில், சென்னை துறைமுகக் கழகத்தின் தலைவர் பி.ரவீந்திரன், சென்னை மண்டல சுங்கத் துறை முதன்மை ஆணையர் கே.அஜீத்குமார், மத்திய கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு: காட்டுப்பள்ளி, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்களை தனியார் நிறுவனமான அதானி ஏற்படுத்தி சென்னைத் துறைமுகத்திற்கு போட்டியாக உருவெடுத்து வருகிறது. 
இதன் மூலம் சென்னைத் துறைமுகத்திற்கு வரும் கன்டெய்னர்கள் பிரிந்து செல்லும் நிலை உள்ளது. இருப்பினும் துறைமுக அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் கன்டெய்னர் லாரிகள் வரிசை இன்றைக்கும் பல கி.மீ. தூரத்திற்கு நின்றபடிதான் உள்ளது. இந்நிலையில் புதிதாக ஏற்படுத்தியுள்ள இம்மையம் இனியாவது வெற்றிகரமாகச் செயல்படுமா? பொதுமக்களின் அவதிகள் முடிவுக்கு வருமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com