திருவொற்றியூரில் சுங்கத் துறை புதிய சோதனை மையம் திறப்பு

திருவொற்றியூரில் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கத் துறை சோதனை மையத்தை சென்னை மண்டல சுங்கத் துறை முதன்மை
திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்ட மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சுங்கத்துறை சோதனை மையம்.
திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்ட மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சுங்கத்துறை சோதனை மையம்.


திருவொற்றியூரில் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கத் துறை சோதனை மையத்தை சென்னை மண்டல சுங்கத் துறை முதன்மை ஆணையர் அஜித்குமார் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். 
சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக திருவொற்றியூரில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான சுமார் 11 ஏக்கர் நிலத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு ரூ.11 லட்சம் மாதவாடகை அடிப்படையில் சென்னைத் துறைமுகம் குத்தகைக்கு பெற்றது. ஆனால் குத்தகைக் காலம் மூன்றாண்டுகள் மட்டுமே என்பதால் இங்கு வாகன நிறுத்தும் மையம் அமைப்பதில் சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து 2012-ஆம் ஆண்டு புதிய கருத்துரு அடிப்படையில் 30 ஆண்டு காலத்துக்கு மாதம் ரூ. 16 லட்சம் மாத வாடகை அடிப்படையில் தமிழக அரசிடமிருந்து சிறப்பு ஒப்புதல் பெற்று குத்தகை நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வாகன நிறுத்தும் மையம், துறைமுக உபயோகிப்பாளர்களுக்கான அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சுங்கத்துறை பரிசோதனை மையம் உள்ளிட்டவைகளை அமைக்கும் வகையில் இந்த இடத்தை மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திடம் சென்னைத் துறைமுகம் ஒப்படைத்தது. அதைத் தொடர்ந்து இங்கு அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன. 
சுங்கத் துறை சோதனை மையம் திறப்பு: இங்கு சுங்கத் துறை சோதனை மையம் கடந்த சில நாள்களாக சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை முறைப்படி திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை ஆணையர் அஜித்குமார், மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் பங்கேற்று பெயர் பலகையைத் திறந்து வைத்தனர்.
இங்கு வாகன நிறுத்து மையம், சரக்குகளை இறக்கிச் சோதனையிடும் மேடை, சுங்கத்துறை அலுவலகங்கள், சென்னைத் துறைமுக நுழைவு அனுமதி வழங்கும் மையம், லாரி ஓட்டுநர்களுக்கான ஓய்வறைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
நாட்டிலேயே முதன்முறை: இம்மையம் குறித்து மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் ஏ.டி.சங்கர் கூறியது:
சென்னைத் துறைமுகத்துக்குச் செல்லும் லாரிகளால் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 
துறைமுக நுழைவு வாயிலில் நடைபெறும் பல்வேறு ஆவணப் பரிசோதனைகளால் தேக்கநிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் மையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்து, நேரடியாக துறைமுகத்துக்குச் செல்லும் வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி நாட்டிலேயே முதல்முறையாக இங்குதான் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட கண்டெய்னர்கள், மத்திய ஆயத் தீர்வை முத்திரையிடப்பட்ட கண்டெய்னர்கள் சென்னைத் துறைமுகத்துக்குச் செல்லும் வழியில் இங்கு வரும்போது ஒரே இடத்தில் அனைத்து சோதனைகளும் நிறைவடைந்து முத்திரையிடப்படும். 
பின்னர் நேரடியாக எவ்வித சோதனையும் இன்றி துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக முனையங்களில் கண்டெய்னர்களை இறக்கும் வகையில் புதிய மையம் செயல்படும். இதன் மூலம் போக்குவரத்து விரைவு பெற்று நெரிசல் குறையும் என்றார் சங்கர்.
சுங்கத்துறை ஆணையர் (ஏற்றுமதி) பெஹரா, சென்னைத் துறைமுக போக்குவரத்து மேலாளர் விமல், மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவன கிளை மேலாளர் பிரியா ஜேக்கப், சுங்கத் துறை முகவர் சங்கத் தலைவர் நடராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com