மாதாந்திர பேருந்து பயண அட்டை கட்டணத்தை உயர்த்த திட்டம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாதாந்திர பேருந்து பயண அட்டையின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மாதாந்திர பேருந்து பயண அட்டையின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திரப் பேருந்து பயண அட்டைக்கான கட்டணத்தை ரூ.1000-இலிருந்து ரூ.1300-ஆக உயர்த்த அதிமுக அரசு ஆலோசித்து வருவது கண்டனத்துக்குரியது.
சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பயணத்துக்கு மிகவும் பயனுள்ள இந்தப் பேருந்துப் பயண அட்டைக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது, போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் இழப்புகளை ஏற்படுத்தி, அரசு போக்குவரத்துக் கழகங்களை திவாலாக்கிட அதிமுக அரசு மேற்கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது.
பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: 2011-இல் ஆட்சிக்கு அதிமுக வந்தவுடன் 50 சதவீத பேருந்து கட்டணத்தை உயர்த்தியதால் 2 கோடி பயணிகள் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தி வந்த நிலை, 1 கோடியே 80 லட்சம் பயணிகளாகக் குறைந்தது. பிறகு 2018-ஆம் ஆண்டு முதல் மேலும் 50 சதவீதம் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதால், அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாகக் குறைந்து விட்டது. 
உரிய நேரத்துக்கு வராத பேருந்துகள், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து செல்லும் பேருந்துகள் எனப் பல்வேறு நிர்வாகக் குழப்பங்களால் அரசுப் பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அதிமுக ஆட்சியில் படிப்படியாகக் குறைந்து வருவதிலிருந்து ஏழை, எளியவர்களின் போக்குவரத்து வசதிகளை அரசு எப்படிச் சீர்குலைத்து வருகிறது என்பது தெரிகிறது.
448 புதிய பேருந்துகளின் நிலை என்ன?: மேலும், பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கிய பொதுவுடைமை அடிப்படையைத் தகர்த்து, மீண்டும் பேருந்துகளைத் தனியார் வசம் தாரை வார்த்திட வழி ஏற்படுத்திக் கொடுப்பதைப் போலவும் தெரிகிறது. 
புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல், உத்தரவாதக் காலத்தையும் இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருக்கின்றன. ஆயிரம் ரூபாய் மாதாந்திரப் பேருந்து பயண அட்டையை 1300 ரூபாயாக உயர்த்தத் திட்டமிட்டுள்ள அரசு, தலா ரூ.30 லட்சம் செலவில் வாங்கப்பட்ட இந்த 448 பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்திருப்பது மோசமான நிர்வாகத்துக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.
கைவிட வேண்டும்: எனவே, மாதாந்திரப் பேருந்து பயண அட்டை கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com