டாஸ்மாக் மதுக் கடைகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

உத்தரமேரூரில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரமேரூரில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரமேரூரில் வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகில் பார்வெளி சந்து உள்ளது. இங்கு அருகருகில் இரண்டு அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றின் அருகில் தனியார் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மேலும் 20 மீட்டர் தொலைவில் குடவோலை முறைக்கு பெயர் பெற்ற கல்வெட்டுக் கோயிலான, வைகுண்ட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.
இந்த மதுக்கடை மற்றும் அருகில் இயங்கும் பார்களும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் இடையூறாக இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.  இது குறித்து பொது மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைக்கு அருகில் இயங்கும் கடைகள் அகற்ற  உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உத்தரமேரூரை சுற்றியுள்ள திருப்புலிவனம், மானாம்பதி, கட்டியாம்பந்தல் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன.  உத்தரமேரூர்-வந்தவாசி மாநில  நெடுஞ்சாலைக்கு அருகே பேருந்து நிலையம் அருகில் பார்வெளிச் சந்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படவில்லை. அவை தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஒன்றுதிரண்டு டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com