ஆர்கே நகர் தொகுதியில் பணம் கொடுத்த கட்சியை தடை செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்த அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும் என தேமுதிக மாநில மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த்
காஞ்சிபுரத்தில் கொலையான தேமுதிக பிரமுகர் சரவணனின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.
காஞ்சிபுரத்தில் கொலையான தேமுதிக பிரமுகர் சரவணனின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்த அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும் என தேமுதிக மாநில மகளிர் அணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த்கூறினார்.
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த தேமுதிக தலைமைக்கழக பேச்சாளர் சரவணன் கடந்த 6-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அவரது இல்லத்தில் சரவணனின் உருவப் படத்தை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். குழந்தைகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாயைச் செலுத்தினார். மேலும் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாஜி, கண்ணதாசன், சுரேஷ், சந்துரு ஆகியோரை அடுத்து சரவணன் 5-வது நபராகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற தொடர் கொலை சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. காஞ்சிபுரத்தில் 2014-இல் 29 கொலைகள், 2015இல் 32 கொலைகள், 2016-ல் 34 கொலைகள், கடந்த 3 மாதத்தில் 12 கொலைகள் என கோயில் நகரான காஞ்சிபுரம் கொலை நகரமாக மாறி உள்ளது. சரவணன் கொலையோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதலில் வேட்பாளரை அறிவித்தது தேமுதிக தான். பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்தது எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் வருமா என்ற நிலையில் விரைவில் பொதுத் தேர்தலே வரக்கூடிய சூழல் தமிழகத்தில் உருவாகி உள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு குடியிருப்புப் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்பது மக்களுக்கு விரோதமானது. தில்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான முதல்வர், நிரந்தர ஆளுநர் வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாநில பொருளாளர் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், நகர பொறுப்பாளர் சாட்சி சண்முகசுந்தரம், முன்னாள் நகரச் செயலாளர் ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com