நீரின்றி வறண்டது மதுராந்தகம் ஏரி தூர்வார அரசு நடவடிக்கை எடுக்குமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப் பெரிய மதுராந்தகம் ஏரியில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவையான தண்ணீரே இருப்பு உள்ளது. வறட்சியால் வேகமாக இந்த ஏரி வறண்டு வருகிறது
நீரின்றி வறண்டது மதுராந்தகம் ஏரி தூர்வார அரசு நடவடிக்கை எடுக்குமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப் பெரிய மதுராந்தகம் ஏரியில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவையான தண்ணீரே இருப்பு உள்ளது. வறட்சியால் வேகமாக இந்த ஏரி வறண்டு வருகிறது. இதனை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகளும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்களும் உள்ளனர்.
மழைக் காலங்களில் இந்த ஏரி நீர் நிரம்பி குட்டிக் கடல் போன்று காட்சி அளிக்கும். இதன் நீர்மட்டக் கொள்ளளவு 21.5 அடியாகும். பொதுவாக ஐப்பசி, கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவ மழையினால், இந்த ஏரி நிரம்புவது வழக்கம். ஏரியின் நீர்ப் பாசனக் கால்வாய்கள் மூலம் மதுராந்தகம், முள்ளி, முன்னித்திகுப்பம், கிணார், கத்திரிச்சேரி, வளர்பிறை, கடப்பேரி போன்ற 20 கிராமங்களில் சுமார் 2,413 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
உத்தரமேரூர், வேடந்தாங்கல் போன்ற ஏரிகள் நிரம்பும் நிலையில் அவற்றின் உபரி நீரானது கால்வாய் வழியாக மதுராந்தகம் ஏரியை வந்தடையும்.
இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில், கல்லாற்றில் உபரிநீர் திறந்து விடப்படும். ஏரியின் மதகுகளில் 84 லாக்குகள் உள்ளன. இவற்றில் 32 தானியங்கி லாக்குகள் ஆகும். இவைகளின் மூலம் திறந்து விடப்படும் உபரிநீர் பெரிய கால்வாய்களின் வழியாக, சுமார் 30 ஏரிகளுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளன. அதாவது, அருங்குணம் ஏரி, காவாதூர் ஏரி, வீராணகுணம் ஏரி, சீவாடி ஏரி, நீலமங்கலம் ஏரி, நெசப்பாக்கம் ஏரி போன்ற ஏரிகள் இதனால் பயன்பெறுகின்றன.
இந்த 30 ஏரிகளின் மூலம் சுமார் 4,746.93 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. தஞ்சை டெல்டா விவசாயிகளுக்கு காவிரி ஆற்று நீர் பயனளிப்பது போல, மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு மதுராந்தகம் ஏரி வரப்பிரசாதமாகும். இந்த ஏரி நீரால், ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
மழைக்காலங்களில் வழிந்தோடி வரும் நீர் முறையாக ஏரிக்குச் செல்லமுடியாமல், நீர்வடி கால்வாய்களை பலர் ஆக்கிரமித்துள்ளதால் தடை ஏற்படுகிறது.
கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரி தூர் வாரப்படவில்லை. மழைநீர் செல்லும் நீர்வழி வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ளதாலும், கால்வாய்களில் செடி கொடிகள் அடர்ந்து புதர்மண்டிக் கிடப்பதாலும் ஏரிக்கு முழுவீச்சில் மழைநீர் வந்து சேருவதில்லை. இதனால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையாக அதிக நீரை ஏரியில் தேக்கி வைக்க முடியாமல்போய் விடுகிறது.
இதனைத் தவிர்க்க முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் தமது ஆட்சிக் காலத்தில் உயர்மட்டக் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கான செலவீன மதிப்பீடாக அப்போதைய காலகட்டத்தில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணி விரைவாக முடிக்கப்பட்டது. மதுராந்தகம் பொதுப்பணி துறை (ஏரி பாசனப் பிரிவு) அதிகாரிகள் தூர் வாரும் பணிகளை தொடங்க போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்கின்றனர் விவசாயிகள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்த அளவு பருவ மழை பெய்யாமல் பொய்த்ததாலும், ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பாலும் மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து தடைபட்டது. தற்சமயம் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஏரி நீரை நம்பி பயிர் செய்த விவசாயிகள் தற்போதைய கடும் வறட்சியால் பெரிதும் கவலைக்கு உள்ளாகி தவிக்கின்றனர். மோச்சேரி, கருணாகரவளாகம் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் ஏரி நீர் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து அதிலுள்ள நீரை நம்பி நெல் பயிரிட்டுள்ளனர். தமிழக அரசின் பொதுப்பணி துறையினர், வருவாய்த் துறையினர் இதில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மதுராந்தகம் ஏரிப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அதிக நீரை தேக்கி வைக்கும் வகையில் இந்த ஏரியைத் தூர் வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரி தூர் வாரப்படவில்லை. மழைநீர் செல்லும் நீர்வழி வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ளதாலும், கால்வாய்களில் செடி கொடிகள் அடர்ந்து புதர்மண்டி கிடப்பதாலும் ஏரிக்கு முழுவீச்சில் மழைநீர்வந்து சேருவதில்லை. இதனால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையாக அதிக நீரை ஏரியில் தேக்கி வைக்க முடியாமல்போய் விடுகிறது. *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com