சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம்: மாவட்ட ஆட்சியர்

சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.

சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் 18-21 வயதுள்ள இளம் வாக்காளர்களை அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கல் தொடர்பாக ஜூலை 1 முதல் 31 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு சேர்க்கை முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பா.பொன்னையா பேசியதாவது: எந்த ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப் பொருளுக்கிணங்க 18-19 வயதுள்ள இளம் வாக்காளர்களை அதிகளவு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18-21 வயது கொண்ட புதிய இளம் வாக்காளர்களுக்கென வாக்காளர் பட்டியலில் சிறப்பு சேர்க்கை பணி மற்றும் திருத்தம் பணி ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
ஜூலை 31-ஆம் தேதி நிறை நாளில் வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும், இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 9 மற்றும் 23 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
அப்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவார்கள்.
இதில், இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கும் பணியும் நடைபெறும்.
அரசியல் கட்சியினர் இச்சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், புதிய வாக்காளர்களை அதிகளவில் சேர்க்கவும் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தேர்தல் பிரிவு தொலைபேசி எண் 044-27238445 ஐ தொடர்பு கொள்ளலாம் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செளரிராஜன், சார் ஆட்சியர்கள் அருண்தம்பு
ராஜ், ஜெயசீலன், கில்லி சந்திரசேகர், தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) விமலா மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com