அரசு வீடு வழங்கும் திட்டம்: அதிகாரிகள் மீது பயனாளிகள் புகார்

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சியில், அரசு வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு கடந்த 6 மாதங்களாக நிதி வழங்கவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மீது

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சியில், அரசு வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு கடந்த 6 மாதங்களாக நிதி வழங்கவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மீது ஆட்சியரிடம் பயனாளிகள் வியாழக்கிழமை புகார் தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொளத்தூர் ஊராட்சியில், கொளத்தூர், நாவலூர், வெள்ளாரை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கொளத்தூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 2016-2017-ஆம் நிதியாண்டில் சுமார் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் வீடு கட்டுவதற்கான பணி உத்தரவு நகல் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கொளத்தூர் ஊராட்சியில் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஏழு பேருக்கு கடந்த 6 மாதங்களாக அரசு நிதியுதவி வழங்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஏழு பேரும், வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிடுவதற்காக ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்துக்கு வந்த ஆட்சியர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் ஆட்சியர் விசாரணை நடத்தினார்.
இதில், பாதிக்கப்பட்ட ஏழு பயனாளிகளுக்கும் வீடுகளுக்கான பணி உத்தரவை அவர்களுக்குத் தெரியாமல் அதிகாரிகள் ரத்து செய்தது தெரியவந்தது.
ஆனால் பயனாளிகள் வீடுகள் கட்டியுள்ளதால், கட்டப்பட்ட வீடுகளை பார்த்துவிட்டு பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியுதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com