ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தை நிரப்பக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு

மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தை நிரப்பக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு காந்தூர், மதுரமங்கலம், ஏகனாபுரம், பிச்சுவாக்கம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், செல்லம்பட்டிடை, கோட்டூர், கண்ணந்தாங்கல், நெல்வாய், சிவபுரம், துளசாபுரம், தண்டலம், புதுப்பட்டு உள்ளிட்ட சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோதனைகளுக்காகவும், பிரசவம், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் வந்து செல்கின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 21 கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் இங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் இருந்ததாகத் தெரிகிறது. அவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில்குமார் ஒரு வாரத்தில் மூன்று மருத்துவர்கள் நியமிக்கப்படுவர், அதுவரை மொளச்சூர் மற்றும் குன்றத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் இங்கு பணியில் இருப்பர் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com