ரஜினி தனிக்கட்சிதான் தொடங்குவார்: திருநாவுக்கரசர் பேட்டி

ரஜினி தனிக்கட்சி தான் தொடங்குவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

ரஜினி தனிக்கட்சி தான் தொடங்குவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராஜீவ் காந்தியின் 26-ஆவது நினைவுநாள் நாடும் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி இந்தியாவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். விஞ்ஞானம், தொழில்துறை மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக உயர்த்தியவர்.
இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தை தொடங்கி, சாதாரண மக்களையும் கல்வி கற்க வைத்தவர். பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வந்து, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியவர். அண்டை நாடுகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அணு ஆயுதங்களை குறைத்து, உலக அமைதிக்கு வித்திட்டவர் ராஜீவ் காந்தி என்றார்.
அப்போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், "ரஜினி எனது நீண்டகால நண்பர். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அதே வேளையில் அவர் மாநில கட்சிகளிலோ அல்லது தேசிய கட்சிகளிலோ சேரமாட்டார். அவர் தேசிய சிந்தனை உள்ளவர். எனவே தனிக் கட்சி தொடங்குவார் என நம்புகிறேன்' என்றார்.
 அரசியல் தலைவர்களின் வீடுகளில், வருமான வரித்துறை சோதனை அதிகரித்து வருகிறதே என்ற கேள்விக்கு "மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் வகையில் உள்ள மிரட்டல் இது என்றார்.
 திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பிரதமர் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், "சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், பிரதமரை சந்திப்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய அரசு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.
 தில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும் பிரதமரைச் சந்திக்க அனுமதி அளித்திருக்க வேண்டும். மத்திய அரசின் அலட்சிய போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ. 80 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com