மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதிகளை சூழ்ந்த மழைநீர்

மாமல்லபுரம் அருகே பக்கிங்காம் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக புலிக்குகை உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. 
மாமல்லபுரம் புலிக் குகைக் கோயில் பகுதியில் தேங்கிய மழைநீர்.
மாமல்லபுரம் புலிக் குகைக் கோயில் பகுதியில் தேங்கிய மழைநீர்.

மாமல்லபுரம் அருகே பக்கிங்காம் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக புலிக்குகை உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. 
தொடர் கனமழையால் மாமல்லபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளம் மற்றும் ஏரிகள் நிரம்பி வழியத்தொடங்கியது. இதையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குச் செல்ல முடியாமல் மீனவர்கள் அச்சத்துடனும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையிலும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கக்கூடிய மாமல்லபுரம் நகரம், மழையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. கனமழையால் மழைநீர் வெளியேற வழியின்றி, பெரும்பாலான சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நகர மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்தனர். நகர்வாழ் மக்கள் மட்டுமின்றி, மாமல்லபுரம் தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் வெளியே வர முடியாமலும், அத்தியாசியப் பொருள்களை வாங்க முடியாமலும் அறையிலேயே முடங்கினர். மழைநீர் வெளியேற முடியாமல் மாமல்லபுரம் பேருந்து நிலையம் தலசயனப்பெரு மாள் கோயில் சாலை அர்சுணன் தபசு, கலங்கரை விளக்கம் சாலை , வெண்ணெய் உருண்டை பாறை சாலை, கடற்கரை கோயில் பகுதி, ஐந்துரதம் கோயில் பகுதி, புலிக்குகை, குடைவரை சிவன் கோயில் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தலசயனப் பெருமாள் கோயில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.
இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மழைநீர் தேங்கும்போது மட்டும் தாற்காலிகப் பணியினை பேரூராட்சி நிர்வாகம் செய்து கணக்கை காட்டுகின்றனர். சுற்றுலாப் பயணிகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொட்டும் மழையிலும் குடையுடனோ அல்லது குடையின்றி நனைந்த வண்ணமோ மகிழ்ச்சியாக சுற்றுலா இடங்களை பார்த்து மகிழ்வர். ஆனால் சாலைகளில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால்தான், வெளிநாட்டினர் வெளியே வர அச்சப்படுகின்றனர்.
ஒவ்வொரு பருவமழைக்கும் பேரூராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பணிகளை செய்யத் தவறுவதால் தான் மாமல்லபுரம் நகர் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் எங்களது வழிகாட்டி தொழிலும் பாதிக்கப்படுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். 

தலசயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com