அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் ஒரத்தி கிராம ஊராட்சி மக்கள் 

மதுராந்தகம் அருகே ஒரத்தி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பயன்படாத நிலையில் உள்ள சமுதாயக் கூடம். (
பயன்படாத நிலையில் உள்ள சமுதாயக் கூடம். (

மதுராந்தகம் அருகே ஒரத்தி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ளது ஒரத்தி ஊராட்சி. இங்கு காட்டுபிள்ளையார் கோயில், டி.வி. நகர், இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இவற்றில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 5 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் உள்ளன.
அவற்றில் செல்லியம்மன் கோயில் பகுதி மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் தூண்கள் சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஒரத்தி பேருந்து நிறுத்துமிடம் எதிரில் உள்ள குளத்தின் மையப் பகுதியில் செடி, கொடிகளுடன் திறந்த வெளிக் கிணறு உள்ளது.
மழைக் காலங்களின்போது வரும் பெருக்கெடுத்து வரும் மழை நீரில் குப்பைக் கூளங்களும், பல்வேறு கழிவுகளும் திறந்த வெளிக் கிணற்றுக்கு வருவதால் குடிநீர் மாசமடைந்து விடுகிறது. இதனைக் குடிக்கும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாவதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2011-2016 ஆண்டு காலகட்டத்தில் அப்போதைய எம்எல்ஏவாக இருந்த கணிதா சம்பத், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 27 லட்சம் மதிப்பில் பயணிகள் தங்கிச் செல்லும் வகையில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டது. வந்தவாசி, மதுராந்தகம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த பேருந்து நிறுத்த நிழற்குடை அருகே கழிப்பறை வசதி இல்லை. இதனால் பயணிகள் குறிப்பாக பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர். 
அதுபோல் இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவரும், 4 செவிலியர்களும் தற்சமயம் பணியாற்றி வருகின்றனர். 
தற்போது மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் உரிய படுக்கை வசதிகள் இல்லாததால், அவர்களை நோயாளிகள் அமரும் பெஞ்சில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. 
மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து போனதால், அருகில் உள்ள முள்புதர்களில் இருந்து விஷ ஜந்துகள் மருத்துவமனை ஊழியர்களையும், நோயாளிகளையும் கடித்து விடுவதாகக் கூறப்படுகிறது. 
ஒரத்தி பஜார் வீதி அருகே செயல்பட்டு வரும் துணை விவசாயக் கிடங்கில் நெல் விதைகள், பூச்சி மருந்துகளை வாங்கிச் செல்லும் வகையில், கடந்த 18.5.1974 முதல் செயல்பட்டு வருகிறது. 42 வருடங்களாகியும் இந்த கிடங்கு மின்வசதி இல்லாமலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். 
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பழுதடைந்த இக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டி துணை விவசாய கிடங்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2014-இல் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல், ஒரத்தி ஊராட்சியை தத்து எடுத்து, அதன் வளர்ச்சிக்காக அனைத்துப் பணிகளை செய்து தருவதாக அறிவித்தார். அதன்படி, செல்லியம்மன் கோயில் தெரு, மருத்துவமனை சாலை ஆகிய இரு பகுதிகளிலும் தலா ரூ. 3 லட்சம் செலவில் சிமென்ட் சாலை போடப்பட்டது.
பேருந்து நிலையம், திரெளபதியம்மன் கோயில் ஆகிய இரு இடங்களிலும் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. மற்றபடி வேறு வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர். 
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலை வசதி, மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமனம், பேருந்து நிறுத்துமிடத்தின் அருகே கழிப்பறை வசதி, குடிநீர் வழங்குகின்ற அனைத்து திறந்தவெளிக் கிணறுகளிலும் இரும்பிலான மூடியை பொருத்துவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com