கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம் ஓடை கரைப்பகுதி குடியிருப்புகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம் ஆகிய ஓடைக்கரைகளிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கம் ஆகிய ஓடைக்கரைகளிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
 மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி, சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.
 தேங்கிய வெள்ளநீரை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி வருகிறது. இருப்பினும், ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் வடிவதில் தாமதமாகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றில் கலக்கும் மண்ணிவாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய ஓடைகள் நந்திவரம், கூடுவாஞ்சேரி ஆகிய ஏரிகளின் உபரிநீர் கலக்கும் இடமாக உள்ளது. மேலும், இந்த ஓடைகளின் இரு பக்க கரைகளில் கடைகள், வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கென, வருவாய்த்துறை ஆவணத்தின் படி, அளவிடப்பட்டு அடையாளக் குறியீடு இடும் பணி அண்மையில் நடைபெற்றது.
 தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மண்ணிவாக்கம் ஓடையின் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து கூடுவாஞ்சேரி ஓடை இரு கரையிலுள்ள ஆக்கிரமிப்புகள் ஆதனூர்-கூடுவாஞ்சேரி சாலை, நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரிகளில் உபரிநீர் கலக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, நன்மங்கலம் ஏரி உபரிநீர் செல்லும் மணிகண்டன் நகர்ப்பகுதி கால்வாய் கரைகளில் உபரிநீர் செல்வதை ஆட்சியர் பார்வையிட்டார்.
 பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
 ஆறுகள், ஓடைகள், வடிகால்களின் கரைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தன.
 இதனால், தேங்கியுள்ள மழைநீர் வடிவது காலதாமதமானது. வருவாய்த் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் கணக்கிடப்பட்டு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், வீடு இழந்தவர்களுக்குக் குடியிருக்க மாற்று இடம் வழங்கப்படும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com