வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாயம்?

வேகவதியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்க எடுக்கச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாயம்?

வேகவதியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்க எடுக்கச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட வடதமிழகத்தில் கடந்த 2 வாரங்களாகக் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள 924 ஏரியில் 250க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
 நிரம்பிய தாமல் ஏரி: காஞ்சிபுரம் நகரையொட்டி உள்ள தாமல் ஏரியும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதிலிருந்து உபரிநீர் சிறு அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தாமல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் காஞ்சிபுரம் நகர பகுதியினுள் ஓடும் பாலாற்றின் துணை ஆறான வேகவதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
 வேகவதியாற்றில் வெள்ளம்?: இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்னும் சில தினங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. தொடர்ந்து, பெய்யவிருக்கும் கனமழையால், தாமல் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். அப்போது, ஏரியிலிருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டால், வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
 இதனால், வேகவதி ஆற்றையொட்டியுள்ள தாழ்வானப் பகுதிகளில் வெள்ளநீர் உள்ளே புகுந்து விடும். எனவே, கரைகளையொட்டி உள்ள ஆக்கிரமிப்பு, வெள்ளநீர் விரைவாகச் செல்வதற்கேற்ப தூர்வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பொதுப்பணித் துறை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து வேகவதி ஆற்றையொட்டிய குடியிருப்புவாசிகள் கூறியதாவது: வேகவதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் கீழ்கதிர்பூர், பிள்ளையார் பாளையம், ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து சேதத்தை விளைவிக்கக்கூடும். தற்போது, ஆற்றில் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நேரத்தில் தாமல் ஏரி நிரம்பி நீர் வரத்து அதிகரித்து, அதன் உபரி நீர் வேகவதியாற்றில் வந்தால் தாழ்வான பகுதிகள் நிச்சயம் பாதிக்கக்கூடும். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாமல் ஏரி நிரம்பியுள்ளது. ஆனால், ஏரிக்கு நீர் வரத்து குறைந்த அளவிலேயே உள்ளது. அதுபோல், வெளியேற்றப்படும் உபரிநீரும் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், ஏரிக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதோடு, வேகவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 மாற்று வழி உண்டு: அதன்படி, ஆற்றின் இருபுறமும் 30 மீட்டர் அகலத்துக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்து, இரு கரைகளிலும் கரை கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கனமழையினால், தாமல் ஏரிக்கு நீர் வரத்து வந்தாலும், அதனைப் பாதுகாப்பான முறையில் வெளியேற்ற மாற்று வழிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 தயார் நிலையில்..: அதோடு, வேகவதியாற்றில் தூர்வாரப்பட்டும் வருகிறது. அதுபோல், மாவட்டம் முழுவதும் ஏரிகளில் முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ள ஒரு லட்சம் மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், வேகவதியாற்றில் வெள்ளநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டால், அதனை சமாளிக்க பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் தயாராக உள்ளன. எனவே, எந்தவகையில், வேகவதியாற்றில் வெள்ளம் வந்தாலும், இதர பிரச்னைகளை எதிர்கொள்ள பொதுப்பணித்துறை தயார்நிலையில் உள்ளது என்றார் அவர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com