சங்கரா பல்கலை.யில் முத்துசுவாமி தீட்சிதர் இசைநிகழ்ச்சி

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இசை நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது. 
சங்கரா பல்கலை.யில் முத்துசுவாமி தீட்சிதர் இசைநிகழ்ச்சி

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இசை நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது. 
காஞ்சிபுரம், ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீசங்கரா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதரின் கருத்துகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தேசிய அளவிலான இசை நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது. 
இந்த இசை நிகழ்ச்சி நவம்பர் 13 முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இதில், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதரின் பெருமைகளைக் கூறியும், அவரின் கீர்த்தனைகளைப் பாடியும் சிறப்பித்து வருகின்றனர். 
இதன் தொடக்க நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர் விஷ்ணு போத்தி தலைமை வகித்து, தீட்சிதரின் இசை, இலக்கியத் திறனை வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்ச்சியை நெய்வேலிசந்தானகோபாலன் தொடங்கி வைத்து, இக்காலகட்டத்தில் இசையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, நெய்வேலி சந்தானகோபாலன் குழுவினரின் ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதரின்கீர்த்தனைகள் பற்றிய செயல்விளக்கவுரை நடைபெற்றது.
இதையடுத்து, நவம்பர் 14-ஆம் தேதி தேசூர் செல்வரத்தினம் மற்றும் காஞ்சி சண்முகசுந்தரம் குழுவினரின் நாகஸ்வர இசைநிகழ்ச்சி, அத்துடன், ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணனின் வாய்ப்பாட்டு, மைசூர் சந்தன் குமார் மற்றும் குழுவினரின் புல்லாங்குழலிசை, திவ்யா ஸ்ரீலக்ஷ்மி, மானஸா கே.பி. ஆகியோரின் நடன நிகழ்ச்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து, 'பத்மஸ்ரீ' கன்யாகுமாரி குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி, 'கலைமாமணி' ஜாகிர் ஹுசைனின் நடன நிகழ்ச்சி ஆகியவை இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. 
நிகழ்ச்சியில், கர்நாடக சங்கீத வித்வான்கள், பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவர் கே.வெங்கடராமன், வடமொழித் துறையின் துணைப் பேராசிரியர் சங்கர நாராயணன், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து, புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெறும் நிறைவு இசை நிகழ்ச்சியில், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் 'வீணை' காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com