தீபாவளிக்கு அனைவரும் ஒரு கதராடையாவது வாங்க வேண்டும்: ஆட்சியர் வலியுறுத்தல்

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி பயன்பெற வேண்டும் என ஆட்சியர் பா.பொன்னையா வலியுறுத்தினார். 

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி பயன்பெற வேண்டும் என ஆட்சியர் பா.பொன்னையா வலியுறுத்தினார். 
மகாத்மா காந்தியின் 149-ஆவது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிபாக்கத்தில் உள்ள கதர் அங்காடியில் திங்கள்கிழமை தீபாவளி விற்பனையை ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்துப் பேசியது: 
நாட்டு மக்களை வாட்டும் வறுமையைப் போக்குவதற்கு சரியான மருந்து கைராட்டினமே என மகாத்மா காந்தி கூறியுள்ளார். அவ்வகையில், நாட்டிலுள்ள ஏழை, எளியோருக்கு கதர் நூற்பும், நெசவும் வாழ்வளித்து வருகிறது. இதன்மூலம், கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு, சலவை, குளியல் சோப்பு, ஊதுபத்தி தயாரித்தல், தேன் சேகரித்தல் உள்ளிட்ட தொழில்களை செய்வோர், அதனைச் சார்ந்த உபதொழில் செய்வோருக்கும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் வாய்ப்பளிக்கிறது. அதோடு, கதர் துணி உற்பத்தி மற்றும் கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்கு சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது. 
மாவட்டத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கதர் அங்காடிகளும், மாமண்டூர், திருக்கழுகுன்றம் பகுதியில் சோப்பு அலகும் செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் கதர் அங்காடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கதர் கிராமத் தொழில் ஆணைக் குழுவும், தமிழக அரசும், கதர் பட்டு, பாலியஸ்டர், கம்பளி ரகங்களுக்கு 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. 
கடந்த ஆண்டில் ரூ.43 லட்சம் இலக்கு நிர்ணயித்து ரூ.38 லட்சம் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. அத்துடன், கிராமப் பொருள்கள் ரூ.37.29 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக, ரூ.55 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் சிறப்பு தள்ளுபடி காலங்களில் ஒரு கதர் ஆடையாவது வாங்கி பயன்பெற வேண்டும். கதராடை வாங்குவதன் மூலம், கிராமப்புறங்களில் வாழும் எண்ணற்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகுக்கும் என்றார். 
முன்னதாக, காந்தியடிகளின் உருவப்படத்துக்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், கதர் அங்காடி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com