மலேசியாவில் தவிக்கும் தாயை மீட்டுத் தரக்கோரி ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு

மலேசியாவில் தவிக்கும் தங்களது தாயை மீட்டுத் தரக்கோரி, அவரது பிள்ளைகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி
மலேசியாவில் தவிக்கும் தாயை மீட்டுத் தரக்கோரி ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு

மலேசியாவில் தவிக்கும் தங்களது தாயை மீட்டுத் தரக்கோரி, அவரது பிள்ளைகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி ஆகியோரிடம் புதன்கிழமை மனு அளித்தனர். 
காஞ்சிபுரத்தை அடுத்த திருக்காலிமேடு பகுதியில் வசித்து வருபவர் அன்பு. இவர் காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அல்லி (38). இவர்களுக்கு மகன் விக்னேஷ் (22), மகள்கள் கீர்த்தனா (19), சங்கீதா (17) ஆகியோர் உள்ளனர். அல்லி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அறிமுகமானவர்கள் சிலர் மலேசியாவில் வீட்டு வேலை இருப்பதாகக் கூறியதையடுத்து, தனியார் நிறுவனம் மூலம் கடந்த ஜூலை மாதம் மலேசியாவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அல்லி, மலேசியாவுக்கு அனுப்பி வைத்த தனியார் நிறுவன பிரதிநிதிகளின் வீட்டிலேயே வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் வரை எந்த பிரச்னையும் இன்றி குடும்பத்தினர், உறவினருடன் அல்லி பேசி வந்துள்ளார். 
இந்நிலையில், தொலைபேசியில் பேசுவதை அவர் நிறுத்தியதால், அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் விசாரித்துள்ளனர். இருப்பினும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன் பிறகு, செப்டம்பர் மாத தொடக்கத்தில் பேசியபோது தொலைபேசி பழுதாகியுள்ளதாகவும், மீண்டும் இணைப்பில் வருவதாகவும் தனது பிள்ளைகளிடம் அல்லி கூறினாராம். அதன்பிறகு, அவ்வப்போது பேசிய அல்லி, கடந்த இரண்டு வாரங்களாக, வேறொரு இணைப்பிலிருந்து ரகசியமாக பேசியுள்ளார். அப்போது, தான் மலேசியாவில் வேலைபார்க்கும் வீட்டில் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், விரைந்து தன்னை மீட்க வேண்டும் எனவும் தனது பிள்ளைகளிடம் கோரியுள்ளார். இதையடுத்து, அல்லியின் மகன் விக்னேஷ் உள்ளிட்டோர் தனது தாயை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் மனு அளித்தனர்.
பின்னர், அல்லியின் மகன் விக்னேஷ் கூறியதாவது: மலேசியாவில் வேலைபார்த்து வரும் எனது தாயை வீட்டு உரிமையாளர் கொடுமைப்படுத்துவதோடு, தொலைபேசியை பறித்து வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அளித்தால், திருடியதாகக் கூறி மலேசிய போலீஸாருக்கு தகவல் அளித்து விடுவதாக மிரட்டுகின்றனராம். எனவே, மலேசியாவில் சிக்கித் தவிக்கும் எங்களது அம்மாவை மீட்டுதர அரசு உதவ வேண்டும். இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளோம். உரிய வகையில், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com