தற்கொலை செய்து கொண்டது ரௌடி ஸ்ரீதர்தானா?: காஞ்சிபுரம் எஸ்.பி. பரபரப்பு தகவல்

தற்கொலை செய்து கொண்டது ரௌடி ஸ்ரீதர்தானா?: காஞ்சிபுரம் எஸ்.பி. பரபரப்பு தகவல்

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டது ரௌடி ஸ்ரீதர்தானா என்பதை உறுதிப்படுத்த மேலும் சில நாள்கள் ஆகும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டது ரௌடி ஸ்ரீதர்தானா என்பதை உறுதிப்படுத்த மேலும் சில நாள்கள் ஆகும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் பகுதியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் பிரபல ரௌடி ஸ்ரீதர். 
இவர் கடந்த புதன்கிழமை இரவு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக அவரது வழக்குரைஞர் புருசோத்தமன் உறுதியாக தெரிவித்தார். இதையடுத்து, அவரின் சடலத்தைப் பார்க்க வழக்குரைஞர், ஸ்ரீதரின் மகன் சந்தோஷ் குமார், மகள் தனலட்சுமி உள்ளிட்டோர் புதன்கிழமை மும்பை வழியாக கம்போடியா சென்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம், திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ரீதரின் கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருப்பினும், ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில், போலீஸ் தரப்பில் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால், கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டது ஸ்ரீதர்தானா என சந்தேகம் எழுந்துள்ளது. 
இதுகுறித்து எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி செய்தியாளரிடம் கூறியதாவது: 
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாகப் புதன்கிழமை தகவல் வெளியானது. இதையடுத்து, அவரது வழக்குரைஞரும், ஸ்ரீதரின் மகன், மகள் ஆகியோரும் அங்கு சென்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட போது, போலியாக வேறுவொரு நாட்டு கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) தங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
எனவே, கம்போடியா நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உள்பட்டுதான் நடவடிக்கை இருக்கும். அவ்வகையில், அந்நாட்டு அரசு போலி கடவுச்சீட்டில் உள்ள சம்பந்தப்பட்ட நாட்டு தூதரகத்தைத் தொடர்புகொண்டு, இதுதொடர்பாக விசாரிக்கலாம். 
அதன்பின்னர், இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு ஸ்ரீதர் குறித்து விசாரித்தால், அந்நாட்டுக்கு தகவல் அளிப்போம். ஆனால், இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக இரு நாட்டு தூதரகமும் தொடர்பு கொள்ளவில்லை. 
இந்நிலையில், ஸ்ரீதரின் உடலை பார்க்க சென்ற அவரது வழக்குரைஞர் மற்றும் குடும்பத்தினரும் தொலைத்தொடர்பு சாதனம் வழியாக அவரது சடலத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பவில்லை. 
இந்நிலையில், ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வர, அவரது மகள் தனலட்சுமி மனு அளிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர் மனு அளித்த பிறகே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். எனவே, தற்கொலை செய்துகொண்டது ஸ்ரீதர்தானா என்பதை எவ்வாறு நம்புவது. 
யாரோ ஒருவர் தெரிவித்தத் தகவலை வைத்து உறுதிப்படுத்த இயலாது. இந்த விவகாரத்தில், தற்கொலை செய்துகொண்டது ஸ்ரீதர்தான் என்பதை உறுதிப்படுத்தியற்கான தகவல் முழுமையாகக் கிடைத்த பின்னரே, முறையாக தகவல் வெளியிடப்படும். இதற்கு இன்னும் சில நாள்கள் ஆகலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com