ரூ. 2.35 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலையை திருடி மலேசியாவுக்கு விற்க முயற்சி: பொறியாளர் உள்பட 4 பேர் கைது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, ரூ. 2.35 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலையைத் திருடி, மலேசியாவை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாக பொறியாளர் உள்பட 4 பேர் காஞ்சிபுரம்
ரூ. 2.35 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலையை திருடி மலேசியாவுக்கு விற்க முயற்சி: பொறியாளர் உள்பட 4 பேர் கைது

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, ரூ. 2.35 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலையைத் திருடி, மலேசியாவை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாக பொறியாளர் உள்பட 4 பேர் காஞ்சிபுரம் அருகே புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் சாமி சிலைகள் கடத்தலைத் தடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிலர் ஐம்பொன் சிலையை கடத்தி வந்து, விற்க முயற்சி செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி-க்கள் சிவசங்கரன், ரமேஷ் ஆகியோர் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை காஞ்சிபுரத்தை அடுத்த ஆரிய பெரும்பாக்கத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த வேனில், 4 பேர் இருப்பதைக் கண்டனர். போலீஸார் சந்தேகத்தின் பேரில் 4 பேரையும் சுற்றி வளைத்து, வேனை சோதனையிட்டனர். இதில், பழைமை வாய்ந்த ஐம்பொன் சிலை ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
முதல் கட்ட விசாரணையில், இந்தச் சிலையை கடத்தி, மலேசிய நாட்டை சேர்ந்த நபருக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 4 பேரையும் கைது செய்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். வேனுடன், சிலை பறிமுதல் செய்யப்
பட்டது. பின்னர் இதுகுறித்து டி.எஸ்.பி. சிவசங்கரன் செய்தியாளர்களிடம் கூறியது: 
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆரியப்பாக்கம் பகுதியில், பழைமை வாய்ந்த ஐம்பொன் சிலையை 4 பேர் விற்பனை செய்ய முயன்றனர். காஞ்சிபுரத்தை அடுத்த கருவேப்பம்பூண்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (25), உத்தரமேரூரை அடுத்த ஒழுகரையைச் சேர்ந்த பொறியாளர் தட்சிணாமூர்த்தி (29), சென்னை ஆவடியைச் சேர்ந்த சேகர் (28), திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (41) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 
இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சிலை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் ஐம்பொன் சிலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. 52 செ.மீ. உயரமும், 17 கிலோ எடையும் உள்ள இந்தச் சிலை ரூ. 2 கோடியே 35 லட்சம் மதிப்புடையது என்றார். 
இந்தச் சிலை கும்பகோணம் பகுதியில் உள்ள கோயிலில் இருந்து திருடப்பட்டதாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீஸார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com