தீபாவளி: ஆடை வாங்க அலைமோதிய கூட்டத்தால் முக்கிய வீதிகளில் நெரிசல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் ஜவுளி கடைகளில் ஆடைகள் வாங்க கூட்டம் அலை மோதியதால் காஞ்சிபுரம் நகர வீதிகளில் திங்கள்கிழமை நெரிசல் ஏற்பட்டது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம் ஜவுளி கடைகளில் ஆடைகள் வாங்க கூட்டம் அலை மோதியதால் காஞ்சிபுரம் நகர வீதிகளில் திங்கள்கிழமை நெரிசல் ஏற்பட்டது. 
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய வணிகப் பகுதியான காந்தி சாலை, காமராசர் சாலை, செங்கழுநீரோடை வீதி, பச்சையப்பன் சாலை, ஜவஹர்லால் அங்காடி தேரடி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த இடங்களில் பட்டு, பிரேத்யேக ஆடைகள், பட்டாசு, நகைகள், இனிப்பு ஆகிய பொருள்கள் வாங்குவதற்காக கடந்த சில நாள்களாக ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். சென்னை அருகில் இருந்தாலும், பட்டுக்கு காஞ்சிபுரம் பெயர் போனது என்பதால், வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பலர் காஞ்சிபுரம் வந்து பட்டுத் துணி வகைகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால், கடந்த இரண்டு நாள்களாக பார்க்கும் இடமெல்லாம் ஆடைகளை வாங்குவதற்கு பெரிய, சிறிய கடைகளில் மக்கள் கூட்டம் திரளாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களைக் கவர ஜவுளி, பட்டாசு, இனிப்பு கடைகள் மின் விளக்கு அலங்காரங்களில் ஜொலித்து வருகின்றன. அதோடு, தள்ளுபடி சலுகைகளையும் அறிவித்துள்ளன.
தீபாவளி பொருள்களை வாங்க வாகனங்களில் வருவோர், வாகன நிறுத்த வசதி இல்லாததால் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டுச் சென்றனர். இதனால், பேருந்துகள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து, ஊர்ந்து சென்றன. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல், முக்கிய வணிகப் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவ்வப்போது மழை வருவதால் பொதுமக்கள் தீபாவளி பொருள்கள் வாங்குவதில் மந்தநிலை ஏற்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com