பேருந்து இல்லாமல் அவதிக்குள்ளான தென்மாவட்ட பயணிகள்

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தென்மாவட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தென்மாவட்ட பயணிகள் அவதிக்குள்ளாகினர். 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் பணி புரிந்து வருவோர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதற்காக, போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலும் திங்கள்கிழமை மதியம் முதலே அதிகமானோர் குவிந்தனர். வழக்கமாக காஞ்சிபுரத்திலிருந்து, திருப்பதி, திருத்தணி, சேலம், பெங்களூரு, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 
அதுபோல், தென் மாவட்டங்களிலிருந்தும் காஞ்சிபுரத்துக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு அம்மாவட்ட போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகினர். 
இதையடுத்து, இங்கிருந்து செல்லும் சில பேருந்துகளில், வேறு ஊர்களுக்குச் சென்று, அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்து பயணிகள் சென்றனர். இதில், ஒரு சிலர் வீடு திரும்பினர். குறிப்பாக, ஆயுதப்படை காவலர்கள் மதுரைக்கு பேருந்து இல்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இருக்கை இல்லாமல், 4-5 மணிநேரம் காத்திருந்து, அதன்பிறகுவந்த பேருந்துகளில் நின்றவாறே பலர் பயணித்துச் செல்வதைக் காண முடிந்தது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இரவு 7.30, 9 மணிக்கு நேரங்களில் அம்மாவட்ட போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், திங்கள்கிழமை இயக்கப்படவில்லை. இருப்பினும், காஞ்சிபுரத்திலிருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com