"நீதிபதிகளுக்கும் ஆன்மிகம் தேவை'

சிக்கலான சூழ்நிலைகளில் தெளிவான முடிவெடுக்க நீதிபதிகளுக்கும் ஆன்மிகம் தேவை என தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல நீதிபதி ஜோதிமணி தெரிவித்தார்.

சிக்கலான சூழ்நிலைகளில் தெளிவான முடிவெடுக்க நீதிபதிகளுக்கும் ஆன்மிகம் தேவை என தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல நீதிபதி ஜோதிமணி தெரிவித்தார்.
 காஞ்சிபுரத்தை அடுத்த சுங்குவார்சத்திரம் பொடவூர் ஊராட்சியில் உள்ள பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மகிழ்ச்சி கிராமத்தில் சட்ட வல்லுநர்களுக்கான "சட்டம் மற்றும் ஆன்மிகம்' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கருத்தரங்குக்கு, பிரம்மாகுமாரிகள் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆஷாஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஈஸ்வரய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், இயற்கை விதி, மனித சட்டநெறிமுறைகள், ஆன்மிகத்தில் சட்ட நியதிகள் உள்ளிட்டவை குறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.
 கருத்தரங்கில் நீதிபதி ஜோதிமணி பேசியதாவது:
 நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வருவது சட்டங்களை பயில்வதற்கல்ல. படித்த சட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்டுவதற்குத் தான். மக்கள் நீதிபதிகளை இறைவனுக்கு அடுத்தபடியாக பார்க்கின்றனர். இதனால், நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையில் நீதிமன்றத்துக்கு வருகின்றனர். பிரச்னைகளுக்கு நீதி கிடைக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர்.
 அதன்படி, வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும்போது இரு தரப்பினருக்கும் சாதகமாக இருப்பதில்லை. இதில், ஒருவருக்கு நீதிபதி இறைவனாகவும், மற்றொருவருக்கு எதிரானவராகவும் தெரிகிறார்.
 தீர்ப்பு நியாயமானதாக (சாதகமாக) வந்தால் நீதிபதியை கடவுளாக பார்க்கின்றனர். பாதகமாக வந்தால் அப்படி பார்ப்பதில்லை. இறைவனை நேர்மையான கடவுள் என்று கூறுவதில்லை. அதேபோல், நீதிபதியையும் நாம் நேர்மையானவர் என கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் அதற்கு கடமைப்பட்டவர்கள். அதுவே, நீதிபதிகளின் முக்கிய தகுதியாக உள்ளது. குற்றவாளிகள் சமூகத்தால் உருவாக்கப்படுகின்றனர். அனைவரையும் குற்றவாளியாகக் காணஇயலாது. தண்டனை வழங்குவது திருந்துவதற்குத்தான். சிக்கலான சூழ்நிலைகளில் தெளிவான முடிவெடுக்க நீதிபதிகளுக்கும் ஆன்மிகம் தேவைப்படுகிறது.
 ஏனெனில், ஆன்மிகக் கல்வி சிக்கலான சூழலில் உதவி செய்வதோடு, மனதை தவறு செய்வதற்கு அனுமதிப்பதில்லை என்றார்.
 கருத்தரங்கில், நீதிபதி ஈஸ்வரய்யா பேசுகையில், இந்திய நாட்டுக்கு தொன்மையான ஆன்மிக பாரம்பரியம் உண்டு. இந்தப் பாரம்பரியத்தின் மூலமே இந்திய நாகரிகம் உயர்ந்து காணப்படுகிறது. அனைத்தும் ஒன்று எனும் சனாதன தர்மத்தை வலியுறுத்துகிறது. தற்போதுதான் எல்லை தாண்டிய போர் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் எல்லை பிரச்னை இல்லாது பரஸ்பர உறவில் திளைத்திருந்தோம். ஆன்மிகம் அனைவரையும் ஒன்றாக இணைக்கிறது. பல்வேறு சூழ்நிலையில் நீதியை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்படும் முடிவில் ஆன்மிகம் உறுதுணையாகவே இருந்துள்ளது என்றார்.
 நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பேசுகையில், "தன்னை மதிக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் அடுத்தவர்களையும் மதிக்கமுடியும். அதுபோல், நீதித்துறையில் பணிபுரிவதற்கு மனத்தெளிவு, முடிவெடுக்கும் திறன், நடுநிலைமை, நேர்மை ஆகியவை மிகவும் அவசியமானது. வெறும் புத்தக அறிவுமட்டும் போதாது. அவற்றை நடைமுறைப்படுத்தும் அறிவு தேவை' என்றார்.
 பிரம்மகுமாரி அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆஷாஜி பேசுகையில், மனிதர்கள் ஆரம்பகாலத்தில் இயற்கையுடனும், தன்னுடனும், பிறருடனும் இசைந்து வாழ்ந்து வந்தனர். நாளடைவில் உடல் என்ற நினைவில் வந்து அனைத்தையும் மறந்து விட்டோம். இயற்கையின் விதிகளை மீறி விட்டோம். நேர்மையின்றி நடப்பவர்கள் நன்றாகத்தான் வாழ்கின்றனரே எனக் கேட்கின்றனர். ஆனால், கர்மத்தின் விளைவு தவறாது. அவர்களால் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியாது. அனைத்து வழக்குகளுக்குப் பின்னால், ஐந்து விகாரங்களான காமம், கோபம், மோகம், பற்று, அகங்காரம் ஆகியவை கண்டிப்பாக இருக்கும் என்பது நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
 இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள், பிரமுகர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியைச் சுந்தரேசன் தொகுத்து வழங்கினார்.
 இதில், பிரம்மாகுமாரிகள் நீதித்துறை சேவையின் தலைமை நிர்வாகி மகேஸ்வரி, தேசிய இயக்குநர் புஷ்பா, தமிழக ஒருங்கிணைப்பாளர் பீனா, நீதிபதிகள், கல்வியாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com