அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

ராமானுஜரின் 1001ஆவது அவதாரத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனக்

ராமானுஜரின் 1001ஆவது அவதாரத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரி பக்தர்கள் அமைப்பு தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை முடிவுக்கு 
வந்தது.  
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமையான ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு  ராமானுஜர் தானுகந்த திருமேனியாகக் காட்சியளித்து வருகிறார். இக்கோயிலில் ராமானுஜரின் 1001ஆவது அவதாரத் திருவிழா மற்றும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழா வியாழக்ழமை தொடங்கியது. இந்த விழாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள 
உள்ளனர்.
அவதாரத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு போதுமான குடிநீர் வசதி,  கழிவறை வசதி, உடை மாற்றும் அறை ஆகியவற்றை அமைக்கவும், பந்தல்களை அமைக்கவும் உத்தரவிடுமாறு கோரி உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ சாம்ராஜ்ய சபா என்ற பக்தர்கள் அமைப்பு சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை.
இந்நிலையில், அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மேற்கண்ட அமைப்பினர் கடந்த வியாழக்கிழமை முதல் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது. 
இதையடுத்து, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜு, வட்டாட்சியர் ரமேஷ், ஆதிகேசவப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் அந்த அமைப்பின் நிர்வாகி கோவிந்த ராமானுஜ தாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கியதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக கோவிந்த ராமானுஜ தாசன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com