காஷ்மீர் சிறுமி ஆசிபா பலாத்காரம், கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி ஆசிபா வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், எஸ்டிபிஐ கட்சியினரும் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை
காஷ்மீர் சிறுமி ஆசிபா பலாத்காரம், கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி ஆசிபா வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், எஸ்டிபிஐ கட்சியினரும் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஷ்மிரில் அண்மையில் சிறுமி ஆசிபா ஒரு கும்பலால் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை முன்வைத்து, மத்திய அரசைக் கண்டித்தும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் காஞ்சிபுரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, ஜனநாயக மாதர் சங்க நகர செயலர் சௌந்தரி தலைமை வகித்தார். அச்சங்கத்தின் நகர தலைவர் சுமதி, பொருளர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலர் சங்கர், மாவட்டச் செயலர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில், திரளானோர் கலந்துகொண்டனர். 
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்: அதேபோல், இந்த விவகாரத்தை முன்வைத்து, காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவர் ஜாபர் ஷெரீஃப் தலைமை வகித்தார். 
இதில், கட்சியின் மாவட்டச் செயலர் சாதிக் பாஷா உள்பட திரளான தொண்டர்கள் பங்கேற்று, வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கோஷமிட்டனர். 
தமிழ்த் தோழமை இயக்கம் ஊர்வலம்
 காஷ்மீரில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஆசிபாவை பலாத்காரம் செய்த விவகாரத்தை முன்வைத்து, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரைக் கண்டித்து கல்பாக்கம் தமிழ்த் தோழமை இயக்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நடத்தினர். 
தமிழ்த் தோழமை இயக்கத்தினர், பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கல்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலை ஆலமரம் அருகிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். 
நகரியத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் ஊர்வலம் முடிவடைந்தது. 
அப்போது, காஷ்மீரில் சிறுமியை பலாத்காரம் செய்த விவகாரத்தை முன்வைத்து, பாஜக அரசைக் கண்டித்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 
மேலும், குஜராத்தில் 9 வயது சிறுமியை ஒரு கும்பல் 8 நாள்களாக பலாத்காரம் செய்து கொலை செய்ததையும் அவர்கள் கண்டித்தனர். 
இந்தக் கொடிய குற்றத்தில் ஈடுபட்டோரைக் கைதுசெய்து கடுமையான தண்டனை விதிக்குமாறு வலியுறுத்தினர். பின்னர் அம்பேத்கர் சிலையின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com