சுதந்திர தினக் கொண்டாட்டம்

சுதந்திர தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தினக் கொண்டாட்டம்


சுதந்திர தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் பா.பொன்னையா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். 
பின்பு, காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திரத்துக்காக பாடுபட்ட உயிர் வாழும் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 41 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். 
தொடர்ந்து, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை, தாட்கோ, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை, சமூகப் பாதுகாப்புத் திட்டம், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வட்ட வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 272 பயனாளிகளுக்கு ரூ. 1.19 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். 
மேலும், அரசுப் பணியில் சிறப்பாக பணிபுரிந்த 19 வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறை,வேளாண்மைத் துறையின் சார்பில் தலா 4 நபர்களுக்கும், பொதுப்பணித் துறை (மின்பிரிவு), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு), சைல்டுலைன் 1098 திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மின்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, கருவூலத் துறை, நில அளவைத் துறை மற்றும் பேரூராட்சிகள் துறைகளின் சார்பில் தலா 2 நபர்களுக்கும், தோட்டக்கலைத் துறை, கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தலா ஒரு நபர்கள் என மொத்தம் 225 பேருக்கும், 25 ஆண்டுகள் தண்டனைகள் ஏதுமின்றி அப்பழுக்கற்ற முறையில் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 
விழாவில், துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவின் மூலம் சாகசக் கட்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்து விபத்தைத் தடுக்கும் வகையில் உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க, அனைத்து பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டனர். 
இதில், 10 நபர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் கேடயமும், பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார். 
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.நூர்முகமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், சார் ஆட்சியர்கள் ராஜூ, டி.முத்துவடிவேல், டி.மாலதி, எஸ்.சந்திரசேகரன், அரசுத் துறை அலுவலர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
தலைமை அஞ்சலகத்தில்...
காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில், அஞ்சல் கோட்ட தலைமை அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் எம்.ராஜு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். 
காஞ்சிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி ஆணையர் சர்தார், காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் இணைப் பதிவாளர் சந்திரசேகரன், காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் கோதண்டராமன், முருகன் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் வள்ளிநாயகம் உள்ளிட்டோர் அந்தந்த அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்தினர். 
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மதியழகன் தேசியக் கொடியேற்றினார். திருப்பூர்குமரன் வாலிபர் சங்கம் சார்பில், சங்க தலைவர் பார்த்தசாரதி தலைமையில், செயலாளர் முன்னிலையில், நகர துணைத் தலைவர் கருணாமூர்த்தி கொடி ஏற்றினார். 
மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடியேற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. 
தேசியக் கொடியேற்றிய பிறகு, சுதந்திரத்துக்காக உயிர்நீத்த, பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தனர். இதில், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கட்சி பிரதிநிதிகள், அஞ்சல் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில்...
 சுதந்திர தினவிழாவையொட்டி, மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை பொதுவிருந்து நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், காமாட்சியம்மனை வழிபட்டுவிட்டு, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பொது விருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இதில், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி, குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், மாங்காடு நகர அதிமுக செயலாளர் பிரேம்சேகர், மாங்காடு இளைஞர் அணி செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சக்தி விநாயகர் கோயிலில் பொதுவிருந்து...
 செங்கல்பட்டு ஜிஎஸ்டிசாலையில் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி, பொதுவிருந்து நடைபெற்றது. 
விழாவையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை தக்கார் மற்றும் உதவி ஆணையர் க.ரமணி முன்னிலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து, பொதுவிருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இதில், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முத்துவடிவேலு, காவல் துணைக் கண்காணிப்பாளர் கந்தன், அதிமுக நகரச் செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், கோயில் மேலாளர்கள் நரசிம்மன், சிவப்பிரகாசம் மற்றும் பெரியநத்தம் சேப்பாட்டியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில் விழாக் குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com