தமிழகத்தில் விரைவில் தொல்காப்பியர் சிலை: அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் தொல்காப்பியர் சிலை விரைவில் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தொல்காப்பியர் சிலை விரைவில் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
 வாகன எரிபொருள் உற்பத்தி செய்யும் ஷெல் நிறுவனத்தின் சார்பாக எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனங்கள் வடிவமைப்புப் போட்டி ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள கார் பந்தய மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 மூன்று நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 19 பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழுக்கள், யேமன் நாட்டின் ஒரு குழு என மொத்தம் 20 குழுக்கள் கலந்து கொண்டன.
 இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் குழுக்களுக்கு பரிசளிக்கும் விழா இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டார். பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற மாணவர் குழுக்களுக்கு அவர் பரிசுத்தொகையை காசோலைகளாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி, அதிமுக மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தமிழகத்தில் இருந்து போட்டியில் கலந்து கொண்ட வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து, அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் ஆங்கிலப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி இரண்டு வாரங்களில் முடிக்கப்பட்டு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்படும்.
 தமிழ்ச் சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து அவற்றின் மூலமாக பழந்தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 இந்தக் கண்காட்சியில் தமிழ்த் தாய்க்கு சிலை வைக்கப்பட உள்ளது. விரைவில் சென்னை கடற்கரைச் சாலையில் தொல்காப்பியர் சிலை அமைக்கப்பட உள்ளது.
 சொற்குவை என்ற திட்டமும் தொடங்கப்படவிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்கவும், எந்த மொழியில், எந்தத் துறையில் புதிய தத்துவங்கள் வந்தாலும் அதற்கான தமிழ் வார்த்தைகள் வலைதளம் மூலம் உலகிற்கு தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com