பூட்டிக் கிடக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்: பொதுமக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
 ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பண்ருட்டி, வல்லம், மதுரமங்கலம், மொளச்சூர் ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ், 21 துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
 இந்தத் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். அவர் பொதுமக்களுக்கு ஏற்படும் சாதாரணக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்கவும், பிரசவம் பார்க்கவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதற்காக துணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகிலேயே கிராம சுகாதார செவிலியருக்கு குடியிருப்பு ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 21துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் பழைமையான கட்டடத்தில் இயங்கி வருவதால் இந்தக் கட்டடங்களில் தங்கிப் பணிபுரிவதை கிராம சுகாதார செவிலியர்கள் தவிர்த்து வருகின்றனர்.
 இதனால் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செவிலியர்கள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து செல்வதால் மற்ற நேரங்களில் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பூட்டப்பட்டு உள்ளன.
 இதன் காரணமாக துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், கர்ப்பிணிகளும் அதிக தொலைவுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
 செங்காடு பகுதியில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டுள்ளதால், அதன் நுழைவு வாயிலை ஆக்கிரமிப்பு செய்துள்ள அப்பகுதி மக்கள், தங்களது வாகனங்களை நிறுத்தவும், பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் இடமாகவும் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். எனவே பூட்டியே கிடக்கும் அனைத்து துணை ஆரம்ப சுகாதார நிலையங்களையும் திறந்து சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com