மார்ச் 1 முதல் கோமாரி தடுப்பூசி முகாம்: 4,45,900 கால்நடைகளுக்கு இலக்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
 கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயால், விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
 மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள், சிறுகுறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர்.
 எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடப்படுகிறது. இந்நோய் பொதுவாக குளிர், பனிக்காலங்களில், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் கோமாரி நோய் காற்றின் மூலம் வேகமாகப் பரவுகிறது. மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றாலும் இதர கால்நடைகளுக்கு பரவுகிறது.
 இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 45 ஆயிரத்து 900 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகள், 4 மாதத்துக்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு மார்ச் 1 முதல் 21 நாள்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும், குறிப்பிட்ட நாளில், இடத்தில் கால்நடை பராமரிப்புப் பணியாளர்களின் முன்னறிவிப்பின் படி, தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை தவறாது போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com