நாளை பொங்கல் பண்டிகை: கரும்பு, மஞ்சள் வரத்து அதிகரிப்பு

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்பு, மஞ்சள், போகி மேளம் வரத்து காஞ்சியில் அதிகரித்துள்ளது.

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்பு, மஞ்சள், போகி மேளம் வரத்து காஞ்சியில் அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் உள்ளிட்டோர் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்வர்.
அதன்படி, கிராமம், நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகளில் காப்பு கட்டி, பழைய பொருள்களை எரித்து போகி மேளம் கொட்டிசிறுவர்கள் கொண்டாடுவதும், பொங்கல் பானை வைத்து சூரியனுக்கும், உழவுக்குத் துணையாக உள்ள மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கலையும் கொண்டாடி மகிழ்வர்.
பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் ராஜாஜி, ஜவஹர் உள்ளிட்ட காய்கறி அங்காடி வளாகங்கள் மற்றும் சாலையோரப்பகுதிகளில் சேத்தியாதோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்புக் கட்டுகள் வந்து குவிந்து உள்ளன. 
மேலும், போகி பண்டிகைக்காக போகி மேளம், காய்கறி அங்காடிகளில் மொச்சை, பூசணி, வள்ளி கிழங்கு வகைகள் அதிகளவில் வந்துள்ளன.மேலும், ஆயத்த ஆடைகள் விற்கும் சாலையோரக் கடைகள், சிறுவியாபாரிகள் என காஞ்சிநகர் களை கட்டத் தொடங்கியுள்ளது.
இதில், கரும்பு ஒரு ஜோடி ரூ.40-60 வரை விற்பனையாகிறது. போகி மேளம் ரூ.20-30 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு முக்கிய பொருளாக விளங்கும் பொங்கல் பானை விற்பனையும் சூடு பிடித்துள்ளது. 
காந்தி சாலை, பச்சையப்பன் சாலை, நெல்லுகாரத் தெரு, சின்னகாஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய தெருக்களில் கூட்டம் அலைமோதுகிறது. கோஆப்டெக்ஸ், காதி கிராப்ட் மற்றும் தனியார் பட்டு, ஆடை விற்பனை கடைகளில் தள்ளுபடி விற்பனை தீவிரமடைந்துள்ளது. 
போக்குவரத்து நெரிசலால் அவதி: மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் வருதால், வாகன நெரிசலும் அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. 
இதனால், காந்திசாலை, பேருந்துநிலையம் அருகில், பழைய ரயில்வே நிலையச் சாலை, மார்க்கெட் சாலை, சின்ன காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. 
இதனால், மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தில் மாற்றம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com