கந்தன்சாவடி கட்டட விபத்து: விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர்

கந்தன்சாவடி கட்டட விபத்தில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கந்தன்சாவடி கட்டட விபத்தில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 காஞ்சிபுரம் மாவட்டம், கந்தன்சாவடியில் கட்டுமானப் பணியின் போது கட்டடம் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்தவர்கûள் மீட்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை, அப்பல்லோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா நேரில் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினர்.
 காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்குடி அருகே கந்தன்சாவடி, கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இதில், ஜெனரேட்டர் அறைக்கான கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தன.
 அப்போது, திடீரென சாரம் சரிந்து கட்டடம் சரிந்தது. இக்கட்டட இடிபாடுகளில் 33 தொழிலாளர்கள் சிக்கினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 32 பேரும் பலத்த காயமடைந்தனர். மீட்கப்பட்ட அவர்களில் 5 பேர் வெளிநோயாளியாகவும், 16 பேர் கந்தன்சாவடி அப்பல்லோ மருத்துவமனையிலும், 11 பேர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.
 இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் விபத்து நடந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். கந்தன்சாவடி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 பேருக்கும் ஆறுதல் கூறினார்.
 இதையடுத்து, அந்த மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி, யாரும் பயப்படத் தேவையில்லை. அனைவருக்கும் விரைவில் குணமடைய தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
 அதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 கட்டட விபத்தில் 33 பேர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 32 பேருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு உயர்தர நவீன சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேவையான நடவடிக்கை எடுக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நபர்களின் மருத்துவ செலவு முழுவதும் முதல்வர் மருத்துவக் காப்பீட்டு நிதியில் இருந்து வழங்கப்படும். விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கும், காயமடைந்த நபர்களுக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும். விபத்து குறித்து ஆய்வு செய்து, கட்டுமான பணியில் விதிமீறல்கள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 முன்னதாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் விரைந்து சென்று முகாமிட்டு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். அதன்படி, வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் ஆகியோரை விரைந்து மீட்புப் பணியினை முடிக்க அறிவுறுத்தினர்.
 ஆய்வின்போது, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பொது சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைச்சாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, முன்னாள் எம்.எல்.ஏ கந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com