நெடுஞ்சாலை குற்றச்செயல்களைத் தடுக்க காவல் உதவி மையம் திறப்பு

காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கென புதிய காவல் உதவி மையத்தை ஆட்சியர் பா.பொன்னையா திறந்து வைத்தார்.

காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கென புதிய காவல் உதவி மையத்தை ஆட்சியர் பா.பொன்னையா திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்ற நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், சாலை விபத்துக்களை தவிர்க்கவும் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், பொன்னேரிக்கரை சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வழிப்பறி, கொலை, கொள்ளை, மணல் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும், பொன்னேரிக்கரை பகுதியில் காவல் நிலையம் இல்லை. இதனால், சுமார் 6 கி.மீ. தூரத்திலிருந்து போலீஸார் வர நேரிடுகிறது. அதற்குள் குற்றச்செயல் புரிவோர் தப்பி விடுகின்றனர். இது சில நேரங்களில் போலீஸாருக்கு சவாலை ஏற்படுத்துகிறது. 
இதன்காரணமாக, பொன்னேரிக்கரைப் பகுதியில் புறநகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், பொன்னேரிக்கரை சந்திப்பில் மகீந்திரா நிறுவனம் சார்பில் காவல் உதவி மையம் புதிதாக அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, ஆட்சியர் இந்தக் காவல் உதவி மையத்தைத் திறந்து வைத்தார். 
தொடர்ந்து அவர் கூறுகையில், அனைத்து விதமான போக்குவரத்து விதிமீறல்கள், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கண்காணிக்கப்படுவர். அதோடு, குற்றச் செயல்கள் சாலை விபத்துக்களைத் தடுக்கவும் இந்த உதவி மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், காவல் உதவி மையத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விதிமுறைகளைப் பின்பற்றுதல், தலைக்கவசம் அணிதல் உட்பட தகுந்த முறையில் கற்பிக்கப்படுவது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார். 
எஸ்.பி. கூறுகையில், நெடுஞ்சாலைப் பகுதியில் இனி குற்றச் செயல்கள் குறையும். தொடர்ந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி கண்காணிக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இப்பகுதியில் அச்சமின்றி பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், உதவி காவல் கண்காணிப்பாளர் சி.முகிலன், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) ரா.சர்மு, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜு, போலீஸார், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com